குறைந்த நாளில், குறைந்த பட்ஜெட்டில் உருவான சரித்திரப் படம் ‘திரௌபதி 2’

நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜி.எம் பிலிம் கம்பெனி நிறுவனங்கள் சார்பில்  சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில், மோகன்ஜி இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், ரிச்சர்ட் ரிஷி, நட்டி, ரக்ஷனா இந்துசூடன் மற்றும் வேல ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், சிராக் ஜானி, தினேஷ் லம்பா, சரவண சுப்பையா, பரணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் படம் ‘திரௌபதி 2’. விரைவில் வெளியாக உள்ள இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குனர் மோகன்ஜி, தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி, ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ்சுந்தர் பேசினர்.

மோகன்ஜி கூறியதாவது,

“திரெளபதி’ படத்தின் தொடர்ச்சி தான் ‘திரெளபதி 2’. முதல் பாகத்தின் ஹீரோ பற்றிய கதை தான் இந்தப் படம். அது எப்படி 14ம் நூற்றாண்டுக்கு செல்கிறது, என்பது பற்றித்தான் படம் இருக்கும். இதில், மூன்றாம் வீர வல்லாள மகாராஜா பற்றி பேசியிருக்கிறேன். இது முழுக்க முழுக்க வரலாற்று உண்மை. அன்னல்கண்டா என்ற வரலாற்று ஆசிரியர் எழுதிய வரலாற்று புத்தகத்தை மையமாக வைத்து தான் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கிறோம். படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்கள் தான், சில கற்பனையாக சொல்லப்பட்டிருக்கும். அதுவும் கூட இப்படி நடந்திருந்தால், என்ற அடிப்படையில் தான் சொல்லியிருக்கிறேன்.

நமக்கு சேர சோழ பாண்டியர்கள் பற்றி தான் தெரியும். ஆனால், அவர்களுக்குப் பிறகு தென்னிந்தியா முழுவதையும் ஆண்டவர்கள் தான் ஒய்சாலர்கள். கர்நாடகாவை தலைமையாகக் கொண்டு தென்னிந்தியா முழுவதும் 80 பாளையங்களை ஆண்டார்கள். அதில் ஒரு பாளையத்தை வல்லாள மகாராஜாக்கள் ஆண்டார்கள். குறிப்பாக மூன்றாம் வல்லாள மகாராஜா திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார். இப்போதும் திருவண்ணாமலை கோவிலில் கிளி கோபுரம் ஒன்று இருக்கிறது, அவருக்கு சிலை இருக்கிறது. அங்கு அவருக்கு வருடம் வருடம் விழா நடக்கும், அதில் 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வல்லாள மகராஜாவுக்கு கீழ் ஆட்சி செய்தவர்கள் காடவராயர்கள், அவர்கள் விழுப்புரத்தை ஆண்டதாக வரலாறு சொல்கிறது. அவர்களைப் பற்றி தான் இந்த படம் பேசுகிறது. நாயகன் ரிச்சர்ட் வீரசிம்ம காடவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நட்டி மூன்றாம் வல்லாள மகராஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சம்புராயர்கள் குறித்தும் சிறிது பேசியிருக்கிறேன், சம்புராயர் வேடத்தில் வேல ராமமூர்த்தி நடித்திருக்கிறார்.

இந்த கதைக்காக பல ஆய்வுகளை மேற்கொண்டேன். பல வரலாற்று ஆசிரியர்களை சந்தித்து, அவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையிலும், பல ஆதாரங்கள் அடிப்படையிலும் சுமார் ஒரு வருடமாக திரைக்கதை  எழுதினேன். இதுவரை சொல்லப்படாத மற்றும் மக்கள் அறிந்திராத வரலாற்றை பேசும் படமாக இருக்கும்.


பல்லவர்கள் ஆட்சியின் வரலாற்றை சொல்லும் ஒரு படைப்பாக இருக்கும். அப்போது சுல்தான்கள் இங்கு வந்து என்ன செய்தார்கள், அவர்கள் படையெடுப்பின் நோக்கம் என்னவாக இருந்தது, அவர்களை காடவராயர்கள் எதற்காக எதிர்த்தார்கள், எப்படி எதிர்கொண்டார்கள், என்பதை தான் படம் பேசுகிறது.

31 நாட்களில், 50 கோடி ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் இந்த வரலாற்றுப் படத்தை எடுத்து முடித்துள்ளோம். திட்டமிடல் சரியாக இருந்தால் எதையும் செய்து முடிக்கலாம். இந்தப் படத்திற்காக குறைந்தது ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைத்து படத்தை முடித்தோம். எனது படங்கள் அனைத்துமே குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, நிறைவான லாபத்தைத் தந்த படங்கள்.

இந்தக் கதையை படமாக எடுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது, அது என்ன ? என்பதை இப்போது சொல்ல மாட்டேன், அடுத்தடுத்த சந்திப்புகளில் சொல்கிறேன். இப்போது சொன்னால் படம் குறித்து தேவையில்லாத சர்ச்சைகள் எழும்,” என்றார்.

தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி படம் குறித்து கூறுகையில்,

“எங்கள் சக்திக்கு மீறிய பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். இயக்குநர் மோகன் ஜி மற்றும் அவரது குழுவின் கடுமையான உழைப்பால் 31 நாட்களில் படப்பிடிப்பை முடித்தோம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறுவதோடு, தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும்.” என்றார்.

ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ் சுந்தர் பேசுகையில்,

“படம் முழுவதும் இரண்டு கேமராக்களை கொண்டு படமாக்கினோம். போர் காட்சிகளில் மூன்று கேமராக்கள் இருக்கும். படத்தில் ஏழு சண்டைக்காட்சிகள் இடம் பெறுகிறது. அனைத்தும் மிக சிறப்பாக வந்திருக்கிறது. வரலாற்று கதையாக இருந்தாலும், பீரியட் கலர் டோன் பயன்படுத்தாமல், பலவித வண்ணங்களை பயன்படுத்தியிருக்கிறேன். அதனால், ஒரு விளம்பர படத்தை பார்க்கும் அனுபவத்தை படம் கொடுக்கும்.” என்றார்.

”திரெளபதி படத்தில் நடித்ததை கெட்ட கனவாக பார்க்கிறேன்” என்று கூறிய அப்படத்தின் நாயகி ஷீலா, அப்படி கூறியது ஏன் ? மற்றும், ‘திரௌபதி 2’ படத்தில் பாடியது குறித்து பேசிய பாடகி சின்மயியின் விமர்சனங்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் ? அவர்கள் இப்படி பேசுவது ஏன்? என்பதற்கான உண்மைகளை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சொல்லப் போவதாக இயக்குனர் மோகன்ஜி தெரிவித்தார்.

Read Previous

பிரகாஷ்ராஜ் நடிக்கும் ‘ஃபாதர்’

Read Next

கிஷோர் நடிக்கும் ‘மெல்லிசை’

Most Popular