ஆர்யா மற்றும் சந்தானம் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.
சந்தானம் நாயகனாக அறிமுகமான பிறகு, மற்ற நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிப்பதை தவிர்த்து வந்தார். அதற்குப் பதிலாக இரண்டு நாயகர்கள் படங்களில் ஒருவராக நடிக்க முடிவெடுத்துள்ளார். இதற்காக பலரும் கதைகள் கூறி வருகிறார்கள்.
இவர் காமெடியனாக நடிக்காததால் ‘சிவா மனசுல சக்தி 2’, ‘பாஸ் (எ) பாஸ்கரன் 2’ உள்ளிட்ட படங்கள் பேச்சுவார்த்தையிலேயே நின்றுவிட்டது. இதனிடையே தற்போது ஆர்யா – சந்தானம் இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள்.
இந்தப் படத்தினை ‘டிக்கிலோனா’ மற்றும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கவுள்ளார். முழுக்க காமெடி கலந்த பேண்டஸி கதையாக இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் ஆர்யா மற்றும் சந்தானம் இருவருமே நாயகர்களாக நடிக்கவுள்ளார்கள்.
ஆர்யா மற்றும் சந்தானம் இருவருமே ஒப்புக் கொண்ட படங்களை முடித்துவிட்டு, இந்தப் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்கள். இந்தப் படம் மட்டுமன்றி சந்தானம் நடிக்கவுள்ள ‘டிடி ரிட்டன்ஸ் 2’ படத்தினை தயாரிக்கவும் உள்ளார் ஆர்யா.