பாலகிருஷ்ணா நடித்து வரும் புதிய படத்தின் வில்லனாக பாபி தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
’அகண்டா’ படத்துக்குப் பிறகு, பாலகிருஷ்ணா நடிக்கும் படங்கள் அனைத்துமே அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
’வீரசிம்ஹாரெட்டி’, ‘பகவந்த் கேசரி’ உள்ளிட்ட படங்கள் கூட, நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பாலகிருஷ்ணா.
மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படம் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் 109-வது படமாகும்.
இதுவும் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் பாலகிருஷ்ணா உடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை ரகசியமாக வைத்திருந்தது படக்குழு.
தற்போது பாபி தியோல் பிறந்த நாளை முன்னிட்டு, பாலகிருஷ்ணாவுக்கு அவர் வில்லனாக நடித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. ‘அனிமல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தென்னிந்திய மொழிகளிலிருந்து பல்வேறு வாய்ப்புகள் பாபி தியோலுக்கு சென்றுள்ளது.
அதில் சிலவற்றில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதில் பாலகிருஷ்ணா படமும் ஒன்றாகும்.
இந்தப் படத்தில் இன்னும் பாபி தியோல் காட்சிகள் படமாக்கப்படவில்லை. விரைவில் தொடங்கப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.