தில்லு முல்லு 2 – விமர்சனம்

தயாரிப்பு – வேந்தர் மூவீஸ் – எஸ். மதன் இயக்கம் – பத்ரி இசை – எம்.எஸ். விஸ்வநாதன் – யுவன்ஷங்கர் ராஜா பாடல்கள் – கண்ணதாசன், வாலி, நா. முத்துக்குமார் ஒளிப்பதிவு – லக்ஷமன் படத்தொகுப்பு – கே.எல். பிரவீன் – என்.பி. ஸ்ரீகாந்த் கலை – ஆர்.கே. விஜய் முருகன் இணை தயாரிப்பு – எஸ். பிரகாஷ், ராமாஞ்சநேயலு, பி. பாலா, சீனு மக்கள் தொடர்பு – ஜான்சன்

ஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன் நடித்து பாலசந்தர் இயக்கி 1981ல் வெளிவந்த ‘தில்லு முல்லு’ படத்தின் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, புதிய காட்சிகளுடன் முற்றிலுமாக வேறு மாதிரி எடுத்திருக்கிறார்கள்.

ஒருவரே இருவராக நடிக்கும் ஆள் மாறாட்டம் தான் படத்தின் ஒற்றை வரிக் கதை. பழைய தில்லு முல்லுவின் சீரியசான நகைச்சுவையாக அமைத்திருப்பார்கள். இந்த படத்தில் ஜாலியான நகைச்சுவையாக அமைத்திருக்கிறார்கள்.

‘தமிழ்ப் படம்’ பார்த்த பின் சிவாவுக்கென்று ஒரு நகைச்சுவை பாணி அமைந்தது. அது இந்த படத்தையும் சிவா  ஸ்டைல் நகைச்சுவை படம் என்று சொல்ல வைக்கிறது. சிவாவுக்கென்று அமைக்கப்ட்ட, மாற்றப்பட்ட காட்சிகள்  தான் படத்தை ரசிக்க வைக்க தூண்டு கோலாக அமைந்திருக்கிறது. அதைச் சரியாக செய்திருக்கிறார் இயக்குனர் பத்ரி.

நீதிமன்ற வழக்கில் இருக்கும் குடும்ப சொத்து கைக்கு வராமல் போக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார் ‘வெட்டி ஆபீசரான’ சிவா. ‘மினரல் வாட்டர்’ கம்பெனி நடத்தும் முருக பக்தரான பிரகாஷ்ராஜிடம், தானும் ஒரு சிறந்த முருக பக்தர், மிகவும் நல்லவன் என சொல்லி வேலைக்குச் செல்கிறார்.

ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்க்கச் சென்று ,  கலாட்டா செய்து, அங்கு பிரகாஷ்ராஜ் கண்ணில் பட, சிவாவை வேலையை விட்டே தூக்க முடிவு செய்கிறார் பிரகாஷ்ராஜ். ஆனால், சிவாவோ, அது நான் இல்லை, என் தம்பி ‘கராத்தே கங்குலி’ என அளந்து விடுகிறார். அதை நம்பும் பிரகாஷ்ராஜ் சிவாவை வேலையை தொடர வைக்கிறார்.

நண்பனான நடிகன் சத்யன் யோசனைப்படி கண்ணில் ‘கான்டாக்ட் லென்ஸ்’ அணிந்து கொண்டு சிவாவே தம்பி ‘கராத்தே கங்குலி’ ஆகவும் நடிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் கங்குலி பிரகாஷ்ராஜின் மகள் இஷாவுக்கு கராத்தே சொல்லிக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கராத்தே கற்றுத் தரும் தம்பியும் , இஷாவும் போகப் போக காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்த காதல் விவகாரம் தெரிய வரும் பிரகாஷ்ராஜ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நல்லவனான அண்ணன் சிவாவுக்கு இஷாவை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் ‘அகில உலக சூப்பர்ஸ்டார்’ சிவாவா என பலரும் கேள்வி எழுப்பினார்கள். 40 வயதைக் கடந்தவர்களுக்குத்தான் இந்த கேள்வி அதிகமாகவே எழும். ஆனால், இந்த தில்லு முல்லுவில் ‘பசுபதி, கராத்தே கங்குலி’ என இரண்டுவிதமான கேரக்டர்களிலும் சிவா நன்றாக ‘பேசிப் பேசி’ அடிக்கடி டயலாக் காமெடி அடித்து நம்மை நன்றாகவே சிரிக்க வைக்கிறார். (கவனிக்க, நாம் எங்குமே நடிக்க என்று குறிப்பிடவில்லை). அவருக்கு, எது நன்றாக வருமோ அதை நன்றாக செய்திருக்கிறார். இதையே ‘உங்க ஸ்டைல்’ னு வேற சொல்ல வைக்கிறீங்களேப்பா…..

ஹீரோயினாக இஷா தல்வார். இதற்கு முன் மலையாளத்தில் ஒரு அருமையான படத்தில் நடித்துள்ளார் என்று கேள்விப்பட்டோம். இந்த படத்தில் வழக்கமான தமிழ் ஹீரோயின்தான். ஹீரோவை விழுந்து விழுந்து காதலிக்கும் வேலை. ‘பளிச்’ என இருந்து அதை சரியாக செய்திருக்கிறார்.

பிரகாஷ்ராஜிடம் இருந்து மீண்டும் ஒரு நகைச்சுவையான நடிப்பு. ஆனால், அவ்வப்போது ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ பிரகாஷ்ராஜை பார்க்கிறோமோ என்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும், அந்த கேரக்டருக்கு என்ன தேவையோ அதில் அசத்தியிருக்கிறார்.

நண்பனின் தங்கையை காதலிக்கும் ‘நாடோடிகள்’ நகைச்சுவையில் சூரி – மோனிஷா. யாருங்க இந்த மோனிஷா, சில காட்சிகள்ல ஹீரோயினை விட அழகா இருக்காங்க. சூரி கிடைச்ச இடங்கள்ல நகைச்சுவைய கொடுக்க முயற்சி பண்ணியிருக்காரு.

கோவை சரளா நடிப்புல சத்தம் கொஞ்சம் ஓவர். வர்ற எல்லா படங்கள்லயும் மனோபாலா கண்டிப்பா இருக்காரு, உள்ளேன் ஐயான்னு குறிப்பிட வைக்கிறாரு. இளவரசு , சத்யன் இவங்களும் படத்துல இருக்காங்க.

கிளைமாக்ஸ் திடீர்னு என்ட்ரி கொடுத்து ஒரு பத்து, பதினைந்து நிமிஷம் படத்தோட ஹீரோவாகிடறாரு சந்தானம். அந்த கோயில் ‘கல்யாண கலாட்டா’ல சுந்தர். சி ‘டச்’ நிறையவே இருக்கு…நான் – ஸ்டாப் காமெடி..

எம்.எஸ். விஸ்வநாதன் – யுவன்ஷங்கர் ராஜா இசையில் நான்கு பாடல்கள். பழைய தில்லு முல்லுவிலிருந்து ‘தில்லு முல்லு’ பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். உண்மையிலே வித்தியாசமான கலவைதான். ‘ராகங்கள் பதினாறு’ …எஸ்பிபி குரலைக் கேட்டு கேட்டுப் பழகியவர்களுக்கு கார்த்திக் குரல் கொஞ்சம் கடினமாகவே தெரியும்.

‘தில்லு முல்லு 2 ’ – மீண்டும் ஒரு ‘தமிழ்ப் படம் 2’ – பார்த்த எஃபெக்ட் இருக்கும்…

 

Read Previous

என் பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள் – பிரபு சாலமன்

Read Next

‘சிங்கம் 2’ படத்தில் ஆங்கில நடிகர்

Most Popular