ஒன்ஸ்மோர் – விமர்சனம்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் மற்றும் பலர் நடிக்க, காதல் தோல்வியின் வலியையும் கடந்த காலத்தின் நிழல்களையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ஒன்ஸ்மோர். ஒரு சோகமான காதல் கதையை புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறது.

காதல் தோல்வியால் மனச்சோர்வுடன் வாழும் அர்ஜுன் தாஸை அதிதி சங்கர் காதலிக்கிறார். ஆரம்பத்தில் காதலை ஏற்க மறுத்தாலும், அதிதியின் தொடர் முயற்சியால் அர்ஜுன் மனம் மாறி காதலிக்கத் தொடங்குகிறார். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. நிச்சயதார்த்த நாளில் அர்ஜுனின் முன்னாள் காதலி சோனா ஒலிக்கல் தொலைபேசியில் அழைத்து சந்திக்க வேண்டும் என்கிறார். எட்டு வருடங்களுக்குப் பிறகு தொடர்புகொள்ளும் முன்னாள் காதலியை சந்திக்கும் அர்ஜுன் குழப்பமடைவதோடு, பிரிந்ததற்கான காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே ‘ஒன்ஸ்மோர்’.

அர்ஜுன் தாஸ் வழக்கம்போல் இறுக்கமான முகத்துடன் தோன்றுவதோடு, சிரிக்க மறந்தவராகவே சோகத்தை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். முதல் பாதியில் கதாபாத்திரத்திற்கு ஏற்ற விரக்தியுடன் காணப்படும் அவர், இரண்டாம் பாதியில் ரொமாண்டிக் ஹீரோவாக மாறினாலும் முகத்தில் அமைதியும் சோகமும்தான் ஆதிக்கம் செலுத்துகிறது.

நாயகி அதிதி சங்கர் தனது உற்சாகமான நடிப்பின் மூலம் படத்தை சற்று தாங்கிப் பிடித்திருக்கிறார். நிராகரிப்புகளை இயல்பாக எடுத்துக்கொண்டு நாயகனை விரட்டிக் காதலிக்கும் கதாபாத்திரத்தை எளிதாகக் கையாண்டிருக்கும் அதிதி, தனது இயல்பான நடிப்பும் உடல்மொழியும் மூலம் கதாபாத்திரத்திற்கும் படத்திற்கும் பெரும் வலிமை சேர்த்திருக்கிறார்.

மற்றொரு நாயகியாக அறிமுகமாகும் சோனா ஒலிக்கலுக்கு பெரிய பங்கு இல்லை. அவர் ஏன் அர்ஜுனை காதலித்தார், ஏன் பிரிந்தார், மீண்டும் ஏன் வந்தார் என்பதற்கு திரைக்கதையில் வலுவான காரணங்கள் இல்லாததால், அவரது கதாபாத்திரம் படத்துடன் ஒட்டாமல் செல்கிறது.

டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, ஜகபர், மோனிஷ் எலமாரன், வர்ணிகா வரத், அருண்குமார் மணி, சௌந்தர்யா மனோகரன் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு எளிமையாக இருப்பதோடு, நாயகனின் சோகமான முகத்தைப் போலவே முழுப்படத்தையும் மங்கலாகவும் பொலிவில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறது.

ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் கவரும் தன்மை கொண்டவை. மெதுவாக நகரும் திரைக்கதையால் சோர்வடையும் பார்வையாளர்களுக்கு பாடல்கள் உற்சாகம் தரும் விதத்திலும், பின்னணி இசை காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும் விதத்திலும் அமைந்திருக்கிறது.

முதல் பாதியில் நாயகியின் காதல், இரண்டாம் பாதியில் நாயகனின் காதல் என்று நகரும் கதையை எந்தவித சுவாரஸ்யமும் மனதைத் தொடும் உணர்வுகளும் இல்லாமல் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் நாஷ்.

நாம் பார்த்துப் பழகிய காதல் கதையாக இருந்தாலும், அதை உணர்வுப்பூர்வமாகவும் ரசிக்கத்தக்க விதத்திலும் வழங்கத் தவறியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் காதல் மற்றும் ஜோடி பிரிவு காட்சிகள் அழுத்தமின்றி இருப்பது படத்தின் பெரிய பலவீனம்.

அதிதி சங்கரின் உயிரோட்டமான நடிப்பும் அர்ஜுன் தாஸின் இறுக்கமான மனநிலையும், பிளாஷ்பேக்கில் ஏதோ வலுவான காரணம் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் முதல் பாதியை சற்று சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றாலும், இரண்டாம் பாதி எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி பார்வையாளர்களை சோர்வடைய வைக்கிறது.

Read Previous

மண்டாடி – இசை வெளியீட்டு விழா

Read Next

இம்மார்டல் – முன் வெளியீட்டு விழா