மாற்றான் – விமர்சனம்

யாரிப்பு – ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மென்ட்

இயக்கம் – கே.வி. ஆனந்த்

இசை – ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல்கள்  – நா.முத்துக்குமார், பா.விஜய், விவேகா, தாமரை, மதன் கார்க்கி

ஒளிப்பதிவு – சௌந்தர்ராஜன்

படத்தொகுப்பு – ஆண்டனி

சண்டைப் பயிற்சி – பீட்டர் ஹெய்ன்

நடிப்பு – சூர்யா, காஜல் அகர்வால், சச்சின் கடேகர், தாரா

வெளியான தேதி – 12 அக்டோபர் 2012

பிரம்மாண்டமான தயாரிப்பு மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்கு உதவாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படம். தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த பில்லா – 2, முகமூடி, தாண்டவம், படங்களின் வரிசையில் இந்த படமும் இடம் பெறுவதை தவிர்க்க முடியாது.

ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள், ஒரே நாயகன் இரு வேடங்களில் நடிக்கும் கதை என வித்தியாசமாக (?) சிந்தித்தவர்கள், விறுவிறுப்பான திரைக்கதையையும், வித்தியாசமான காட்சிகளையும் சிந்திக்காமல் போனது ஏனோ எனத் தெரியவில்லை.

சச்சின் கடேகர் ஒரு ஜெனிடிக் இன்ஜினியரிங் ஆராய்ச்சியாளர். அவருடைய ஆராய்ச்சியின் பலனான அவருக்கு ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக சூர்யா  சூர்யா  பிறக்கிறார்கள். சூர்யாக்கள் வளர்வதற்குள் மிகப் பெரிய எனர்ஜி உணவு தயாரிக்கும் ‘எனர்ஜியான்’ கம்பெனி முதலாளி ஆகி விடுகிறார் சச்சின் கடேகர்.

அடுத்தடுத்து நடக்கும் சில கொலைகளுக்குக் காரணமானவர் தன்னுடைய அப்பா என ஒரு சூர்யாவுக்கு தெரிய வர அவர் அதை கண்டு பிடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அப்பாவாலேயே அடியாட்களால் கொலை செய்யப்படுகிறார். இது அடுத்த சூர்யாவுக்கு லேட்டாகத் தெரிய வர அவர் அப்பாவை எப்படி பழி (?) தீர்க்கிறார் என்பதுதான் மீதி கதை.

 7ஆம் அறிவு ஜெனிடிக் என்ஜினியரிங்கை மீண்டும் தொடர்ந்து ரசிகர்களை எந்த அளவுக்கு குழப்ப முடியுமோ அந்த அளவுக்கு குழப்பியிருக்கிறார்கள். போதா குறைக்கு, உக்வேனியா (சரியாத்தான் சொல்றமா) நாட்டு விளையாட்டு வீரர்கள் அப்படி , இப்படின்னு காதுல ஒரு மாலையையே சுத்தறாங்க.

படத்துல கேள்வின்னு கேக்க ஆரம்பிச்சால் கேட்டுக்கிட்டே இருக்கலாம், அவ்வளவு லாஜிக் ஓட்டைகள்.

அகிலன், விமலன் என இரட்டையர்களா சூர்யா. கதாபாத்திர வித்தியாசங்களுக்கு அதிக முயற்சி எடுக்கல. கொஞ்சம் சில்லுனு ஒரு காதல், கொஞ்சம் வாரணம் ஆயிரம் என கலந்து கட்டி அ(ந)டிச்சிருக்காரு சூர்யா. ஆனால் ஒட்டி இருக்கிற நடிப்பை எப்படி வெளிப்படுத்தினாருங்கறது இன்னொரு ‘அபூர்வ சகோதரர்கள்’ அளவுக்கு கஷ்டப்பட்டிருப்பாருன்னு தோணுது.

காஜல் அகர்வால். ஹீரோயின் சும்மா வந்து பாட்டு பாடிட்டு போறங்கன்னு யாரும் சொல்லிடக் கூடாதுன்னு அவங்க கதாபாத்திரத்தை மொழி பெயர்ப்பாளரா வச்சிட்டாங்க. அதனால், கதைல நாயகியும் முக்கிய கதாபாத்திரம்தான். ஆனால், அவங்க பேசுறது பாதி ரஷ்ய மொழிங்கறதால நமக்கு எந்த பாதிப்பும் இல்ல. நீங்க பேசறத பார்க்கவா நாங்க படத்துக்கு வர்றோம் ?

சூர்யாவோட அப்பாவா சச்சின் கடேகர், முதலாளித்துவ வில்லன். அம்மாவா தாரா. அப்புறமா சச்சின் உதவியாளரா ரவி பிரகாஷ், உளவாளியா ரவி பிரகாஷ். சமீப காலத்துல 5 கதாபாத்திரங்கள் மட்டுமே முக்கியமா நடிச்ச ஒரு பெரிய படம் இதுவாகத்தான் இருக்கும்.

ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கம் போலவே, புரியற மாதிரி ஒரு இரண்டு பாட்டும், புரியாத மாதிரி ஒரு இரண்டு பாட்டும் போட்டிருக்காரு.  கொஞ்சம் ரூட்டை மாத்துனா நல்லா இருக்கும்.

சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு பாடல்களில் கொள்ளை அழகு. ஆண்டனி , இல்லாத திரைக்கதைக்கு விறுவிறுப்பை சேர்க்க முயற்சி பண்ணியிருக்காரு.

மாற்றான் – சீக்கிரமே மறந்துடுவாங்க.

   

Read Previous

பாடலுக்கு காத்திருக்கும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’

Read Next

தயாரிப்பாளராகிறார் ‘மோகன்’