அமர காவியம் – விமர்சனம்

Amara Kaaviyam - Gallery_00010 படத்தின் டைட்டிலே படத்தின் முடிவு எப்படி இருக்கும் என்பதை ஊகித்து விடக் கூடிய அளவில் இருந்தாலும், ஒரு முரட்டுத்தனமான காதலை பதிவு செய்துள்ள விதத்தில் இயக்குனர் ஜீவா சங்கர் வெற்றி பெற்றிருக்கிறார். நீங்கள் நாற்பது வயதைக் கடந்தவரா, அல்லது நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவரா…உங்களுக்கு இந்தப் படம் கண்டிப்பாகப் பிடிக்கும். உங்கள் பள்ளி, கல்லூரியில் நீங்கள் அனுபவப்பட்ட அல்லது கேள்விப்பட்ட காதல் கதைகளை மனதுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். அறியாத பருவத்தில் வரும் காதல் உண்மையான காதல் அல்ல, சூழ்நிலைகள் அவற்றை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது என்பதுதான் இந்தப் படத்தில் இயக்குனர் சொல்ல வரும் விஷயம். அதை ஒரு எச்சரிக்கை மணியாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இளம் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்களும், பள்ளியில் படிப்பவர்களும் படிப்பைத் தவிர்த்து காதல் போன்ற இன்ன பிற விஷயங்களில் ஈடுபட்டால் என்ன ஆகும் என்பதுதான் இந்த ‘அமர காவியம்’. சத்யா, அனந்த் நாக், மியா ஒரே பள்ளியில் படிப்பவர்கள். அனந்த் நாக், மியா இருவரது குடும்பத்தினரும் நட்புடன் இருப்பவர்கள். அனந்த் நாக்கிற்கு, மியா மீது காதல். ஆனால், அந்தக் காதலைச் சொன்னால் குடும்பத்தார் நட்பில் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என பயந்து நண்பன் சத்யாவை, மியாவிடம் காதல் தூது அனுப்புகிறார். போன இடத்தில் மியா, சத்யாவைத்தான் காதலிப்பதாகவு, அனந்த் மீது அப்படி எதுவும் எண்ணம் இல்லை என்றும் சொல்லி அதிர்ச்சியடைய வைக்கிறார். சத்யாவும், மியாவின் காதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார். இந்தக் காதல் ஒரு கட்டத்தில் இருவரது குடும்பத்திற்கும் தெரிய வர பிரச்சனை ஆரம்பமாகிறது. மியாவைப் பார்க்க முடியாமல் சத்யா தடுத்து வைக்கப்படுகிறார். போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் கேஸ் என இரு குடும்பமும் பிரச்சனைகளைச் சந்திக்கிறது. மியாவைப் பார்க்க முடியாத சத்யா மனதளவில் பாதிக்கப்படுகிறார். பரீட்சை முடிந்ததும் மியாவை அவரது பெற்றோர் வேறு ஊருக்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள். அதைப் பயன்படுத்திக் கொண்டு, சத்யாவின் நண்பன் அனந்த் நாக்கும் சத்யா – மியா காதலில் கபட நாடகம் ஆடுகிறார். மியாவைப் பார்க்க முடியாததால்  சத்யா மீண்டும் மனதளவில் பாதிக்கப்பட அவரை ‘மென்டல்’ என அனைவரும் சொல்லும் அளவிற்கு நடந்து கொள்ள ஆரம்பிக்கிறார். அவர் மியாவைக் கண்டு பிடித்தாரா, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் படத்தின் மீதி கதை. 1988களில் நடக்கும் காதல் கதை, அழகான ரம்மியமான ஒளிப்பதிவு குழப்பமில்லாத காட்சிகள் என படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். அதே சமயம் சத்யாவின் கதாபாத்திர வடிவமைப்பில் மட்டும் கொஞ்சம் தௌவில்லாத நிலை இருக்கிறது. அவர் காதல் தீவிரத்தில்தான் அப்படி நடந்து கொள்கிறார் என்பதை அழுத்தமாக உணர்த்தியிருக்கலாம். இடைவேளைக்குப் பின்தான் அந்த தடுமாற்றம் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கிறது. அழகாக ஸ்கோர் செய்யக் கூடிய கதாபாத்திரம் சத்யாவிற்கு கிடைத்திருக்கிறது. அமைதியாக இருக்கும் காட்சிகளில் பொறுப்பானவராகவும், அப்பாவித்தனமாகவும் நடித்திருக்கிறார். மனதளவில் பாதிக்கப்படும் போது அவரா இவர் என்ற விதத்தில் கண்களிலேயே அந்த காதலால் தவிக்கும் இயலாமையைக் காட்டியிருக்கிறார்.  இது போன்ற இன்னும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தால் விரைவில் முன்னணி பட்டியலிலும் இடம் பிடித்து விடுவார். கார்த்திகா கதபாத்திரத்தில் கண்களாலேயே நம்மைக் கைது செய்து விடுகிறார் மியா. அவர் பார்க்கும் ஒரு பார்வையில் ஒருவர் என்ன ஓராயிரம் பேர் பைத்தியமாக அலைவார்கள். சத்யாவை சந்திக்கும் முதல் காட்சியிலேயே நான் உன்னைத்தான் காதலிக்கிறேன் என அவரைப் பின்னால் வரவைப்பவர், அதன் பின் எப்படி அலைய வைக்கிறார். இப்படி ஒரு காலத்தில் நமது நண்பர்கள் கூட எத்தனை பேர் பின்னாடி அலைந்திருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும் போது ஞாபகம் வருகிறது. காதல், எந்த அளவிற்கு ஒரு தைரியத்தைக் கொடுக்கும் என்பதற்கு மியா கதாபாத்திரம் சரியான உதாரணம். அம்மா வீட்டில் இருந்தாலும் காதலனுக்கு சடக்கென முத்தம் கொடுத்து, இன்னொரு முத்தம் வேண்டுமா என்ற காட்சியில் கிறுகிறுத்துப் போகாமல் யாராலும் இருக்க முடியாது. படத்தில் ‘காவியம்’ என்றால் அது கார்த்திகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள மியா தான். நல்லா நடிக்கிற நடிகை வேணும்னு நினைக்கிற டைரக்டர்ஸ் மியாவை மறக்காம நோட் பண்ணிக்குங்க… அனந்த நாக் அந்த வயதுப் பொறாமை குணத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார். சத்யாவின் பெற்றோராக நடித்திருக்கும் அருள் ஜோதி, ரிந்து ரவி, மியாவின் பெற்றோராக நடித்திருக்கும் வைத்தியநாதன், எலிசபெத் பொருத்தமான தேர்வு. ஜிப்ரான் இசையில் “ஏதேதோ எண்ணம் வந்து…,” முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையில் மட்டும் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். ஊட்டியின் அழகை கண்குளிர காட்சிப்படுத்தியிருக்கிறார் ஜீவா சங்கர். இயக்குனரே ஒளிப்பதிவாளராக இருப்பதும் கூடுதல் அழகுதான். கிளைமாக்சைத் தவிர மற்றவை யதார்த்தமான ‘காவியம்’…  

Read Previous

பட்டைய கௌப்பணும் பாண்டியா – விமர்சனம்

Read Next

பொறியாளன் – விமர்சனம்