அலெக்ஸ் பாண்டியன் – விமர்சனம்

alex pandian_00009

தயாரிப்பு – ஸ்டுடியோ க்ரீன் – கே.ஈ. ஞானவேல் ராஜா

இயக்கம் – சுராஜ்

இசை – தேவிஸ்ரீபிரசாத்

ஒளிப்பதிவு – சரவணன்

படத்தொகுப்பு – பிரவீன். கே.எல். – ஸ்ரீகாந்த் .என்.பி.

கலை – எம். பிரபாகரன்

சண்டைப் பயிற்சி – கே. கணேஷ்குமார்

பாடல்கள் – வாலி, பா. விஜய், விவேகா, கருணாகரன்

நடிப்பு – கார்த்தி, அனுஷ்கா, சந்தானம், நிகிதா, சனுஷா, அகன்க்ஷா  பூரி, மிலிந்த் சோமன், சுமன், மனோபாலா, விசு, பிரதாப் போத்தன், ரேணுகா, லொள்ளு மனோகர் மற்றும் பலர்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தினர் பெயருக்கேற்றபடி முதன் முறையா ‘பச்சை’யான ஒரு திரைப்படத்தை தயாரிச்சிருக்காங்க. படம் ஆரம்பத்துல இருந்து அப்படி ஒரு ‘பச்சை’யான வசனங்கள். எப்படி குடும்பத்துடன் பார்ப்பது ?

இயக்குனர் சூ…ராஜ்….தப்பா எதுவும் பேரை அடிச்சிட்டோம்னு நினைச்சிக்காதீங்க..இந்த படத்துக்கு அப்புறமா அவரை யாரும் ‘சுராஜ் ’னு கூப்பிட மாட்டாங்க…ஏன்னா நகைச்சுவைங்கற பேர்ல சந்தானத்தை வச்சிக்கிட்டு அவர் பண்ற காமெடி எல்லாத்துலயுமே இந்த ‘சூ…’க்கு ஒரு அர்த்தம் இருக்கு. படம் பார்த்தவங்களுக்கு புரியும், பார்க்கணும்னு நினைக்கிறவங்க, நாம எழுதனது தப்புன்னு சொன்னால் ஏத்துக்கறோம்..

சுராஜ் ஸார், அப்படியே ஆந்திரா பக்கம் போனீங்கன்னா உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு..

படத்தோட கதை இதுதான், அமெரிக்காவுல தடை செய்யப்பட்ட  கோடிக்கணக்கான மதிப்புள்ள ஒரு ஆன்டிபயாடிக் மருந்தை , தமிழ்நாட்டுல எடுத்துக்கிட்டு வந்து வியாபாரம் பண்ண நினைக்கிறாரு மிலிந்த் சோமன். ஆனால், அதுக்கு முதலமைச்சர் அனுமதி வேணும்.

அந்த மருந்து சாப்பிட்டால் கொஞ்ச நாள்ல எல்லாருக்கும் உடம்பே கெட்டு போயிடும்னு உண்மை தெரிஞ்ச முதலமைச்சர் விசு, கையெழுத்து போட மறுக்கிறாரு. இதனால, மிலிந்த் சோமன், காசு கொடுத்தால் எதையும் செய்யற கார்த்திய வச்சி, முதலமைச்சர் விசுவோட மகளான அனுஷ்காவை கடத்தறாரு. இத வச்சி  முதலமைச்சரை மிரட்டி அனுமதி வாங்க திட்டம் போடறாரு. அப்புறம் தமிழ் சினிமா வழக்கப்படி என்னலாம் நடக்கணுமோ அது எல்லாமே நடக்குது.

சரி, இதுல எங்க, சந்தானம் கோஷ்டி வருதுன்னுதான யோசிக்கிறீங்க. அங்கதான் நிக்கிறாரு டைரக்டர். அதுதான் சஸ்பென்ஸ்.

‘பருத்தி வீரன்’ படம் ரிலீசான உடனே , சே…ப்ரியாமணிக்கு கொடுத்த தேசிய விருதை கார்த்திக்கு கொடுத்திருக்கலாம்னு யோசிச்சவன் நான். அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப நினைச்சி வருத்தப்பட வேண்டியிருக்கு. கார்த்தி, இப்படியே ஒரு இரண்டு படம் நடிச்சீங்கன்னா…வேணாம், எங்க வாயால அதை சொல்ல விரும்பலை….பலர் மறந்து போன பழைய கதைல நடிக்க நீங்க எப்படி  ஒத்துக்கிட்டீங்கன்னுதான் புரியலை…

படத்துல ஹீரோயின் அனுஷ்கான்னு சொன்னாங்க. அங்கயும் நம்மள டைரக்டர் நல்லா ஏமாத்திட்டாரு. முதல் காட்சியில வந்தவங்க அப்புறம் இடைவேளைக்கு கொஞ்சம் முன்னாடிதான் வர்றாங்க. அப்புறம்தான் டைரக்டருக்கே ஞாபகம் வந்துதோ என்னமோ, அப்புறமா ஒரு இரண்டு பாட்டுக்கு அவங்கள ஆட வச்சிருக்காரு.

அது எப்படி ஸார், முதலமைச்சர் பொன்னா இருந்தா கூட, படிக்காத, ஜெயிலுக்கு ரெகுலரா போற ஒருத்தனை உடனே காதலிக்க ஆரம்பிச்சிடறாங்க.

சந்தானம், அழகா இருக்கிற மூணு தங்கச்சிகளை கார்த்திகிட்ட இருந்து காப்பாத்தறதுதான் அவரோட வேலை. வாயத் திறந்தாலே தங்கச்சிங்க கிட்ட பாசமா பேசுவாருன்னு பார்த்தால் ‘ஆபாசமா’தான் பேசறாரு. எதுக்கும் விஜய் டிவில சொல்லி வைங்க சந்தானம்…திரும்பவும் ‘லொள்ளு சபா’ ஆரம்பிச்சால் நடிக்க நீங்க வேணுமில்லை..‘லொள்ளு’ மனோகரின் தலையை வைத்து கிண்டல் பண்ணுவதையெல்லாம் நீங்கள் நகைச்சுவை என்று நினைத்தால், ஸோ…சாரி….

கோட் போட்ட வில்லன்களா மிலிந்த் சோமன், சுமன், ம்ம்ம்….என்னத்த சொல்ல…

விசு, ரேணுகா, பிரதாப் போத்தன், ராஜ் கபூர் இவங்களும் இருக்காங்க. மனோபாலா எதுக்கு வர்றாரு, அவரை வச்சி காமெடிங்கற பேர்ல ஏன் இப்படி படுத்தறாங்கன்னு தெரியலை..

ஆ…மறந்துட்டமே, சந்தானம் தங்கச்சிங்களா, நிகிதா, சனுஷா, அகன்க்ஷா பூரி. இவங்க கேரக்டர்சை வச்சி இடைவேளை வரைக்கும் படத்தை நகர்த்திடறாரு டைரக்டர். இவங்க அடிக்கிற கூத்துலாம்…சொன்னால்…வேணாம்…எழுத முடியாது…அதெல்லாம் பாவம்..(ஜென்டில்மேன் படத்துக்கு ஒரு நன்றி கார்டு போட்டிருக்கலாம்) .

தேவிஸ்ரீபிரசாத், தமிழ்ப் படம்கறதையே மறந்துட்டு, ஏதோ இந்தி, இங்கிலீஷ், தெலுங்கு இப்படி கலந்து கட்டி அடிச்சிருக்காரு. 2013லயும் வயசுக்கு வர்ற பாட்டுலாம் வச்சி தமிழ் சினிமாவை இந்த அளவுக்கு தள்ளுவாங்கன்னு நினைச்சி கூட பார்க்கலை.

அலெக்ஸ் பாண்டியன் – ‘ஆபாச பாண்டியன்’.

 

Read Previous

விஸ்வரூபம் டிடிஎச்-ல் இல்லை ?

Read Next

‘கட்’ பண்ணப்பட்ட அலெக்ஸ் பாண்டியன்