பாக்யராஜ், ஈடு இணையற்ற கலைஞன் – வைரமுத்து

தமிழ் சினிமாவின் திறமை மிக்க இயக்குனரான பாரதிராஜா இறந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரது சிஷ்யரான கே பாக்யராஜ் மறைந்தார் என்பது திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியது. கவிஞர் வைரமுத்து பாக்யராஜின் மறைவு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் கவிதையில்….

பதினேழே நாட்களில்
இன்னோர் இடியா?

பாரதிராஜாவைப் புதைத்த
மண்ணின் ஈரம்
இன்னும் காயவில்லை;
அதற்குள் பாக்யராஜுக்குத்
தீ மூட்டுவதா?

என்ன கொடுமை இது!

பாக்யராஜ்
ஈடு இணையற்ற கலைஞன்

அவிழ்க்க முடியாத முடிச்சுகளைத்
திரைக்கதையில் இட்டு
அதைத் தான்மட்டுமே
அவிழ்க்கத் தெரிந்தவர்

அவர் உருவம்
குறையென்று கருதப்பட்டது;
அதிலும் வென்றார்

அவர் குரல்
குறையென்று கருதப்பட்டது;
அதிலும் வென்றார்

நகைச்சுவைக்கென்று
அவர் தனித்தடம் தயாரிப்பதில்லை;
கண்ணின் பாகமான இமைபோல
திரைக்கதையில் நகைச்சுவையை
இழைத்து விடுவார்

80களில்
தமிழ் சினிமாவை நோக்கிவந்த
ஒவ்வொரு கிராமத்து இளைஞனுக்கும்
நம்பிக்கை கொடுத்தவர்
பாக்யராஜ்

எம்.ஜி.ஆர் அவரைத்
தன் வாரிசு என்றார்

பாக்யராஜின்
எதிர்பாராத மறைவு
கலையுலகை அதிரவைக்கிறது

வாழ்ந்திருக்க வேண்டிய
கலைஞன் அய்யா நீ!

பாதியில்
பயணப்பட்டு விட்டாயே!

உன் உயிர்
அமைதி அடைக!

ஆழ்ந்த இரங்கல்
அனைவருக்கும்

Read Previous

எப்போதும் நன்றியுடன் இருப்பேன் – அனில் கபூர்

Read Next

நிவின்பாலியின் 50வது படம் ‘விஜயம்’

Most Popular