கமல்ஹாசன் நடித்து வெளிவந்துள்ள ‘பாபநாசம்’ படத்திற்கு நல்ல வரவேற்பையும் வெற்றியையும் தேடிக் கொண்டுத்த பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாலை சென்னையில் நடைபெற்ற நன்றி விழாவில் ‘பாபநாசம்’ படக்குழுவினர் அனைவரும் பங்கு பெற்றார்கள்.
தயாரிப்பாளர்கள் ஜார்ஜ் பயஸ், ஸ்ரீப்ரியா, சித்தாரா சுரேஷ், கமல்ஹாசன், கௌதமி, இயக்குனர் ஜீது ஜோசப், இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், மற்ற நட்சத்திரங்களான நிவேதா தாமஸ், எஸ்தர், கலாபவன் மணி, எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், ஆஷா சரத், ஆனந்த் மகாதேவன், டெல்லி கணேஷ், சாந்தி வில்லியம்ஸ், அபிஷேக், வையாபுரி, கவி பெரியதம்பி, சேரன்ராஜ் ‘பசங்க’ ஸ்ரீராம், மதனகோபால் மற்றும் படத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த சுகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் ‘பாபநாசம்’ படத்தில் இடம் பெற்ற டீக்கடை, கமல்ஹாசனின் வீடு, காவல் நிலையம் ஆகிய ‘செட்’ போடப்பட்டிருந்தது. படத்தின் கதாபாத்திரங்களாகவே மேடையில் அனைத்து நட்சத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.
நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து கமல்ஹாசன் பேசியதாவது,
“இது ஒரு வித்தியாசமான விழா, நடத்தப்பட வேண்டிய விழா. இது வெற்றி விழா அல்ல, நான் எப்ப வெற்றி விழா கொண்டாடினேன்னு சொல்றேன். 40 நாள்ல ஒரு நல்ல படத்தை எடுத்து இன்னையோட ஷுட்டிங் முடிஞ்சதுன்னு சொன்ன அன்னைக்கே நான் வெற்றி விழா கொண்டாடிட்டேன். அதுவே பெரிய விஷயம், புரொடியூசருக்கு வெற்றி. அதை செய்து காட்டிய ஜீதுவுக்கு நாங்க அன்னைக்கே வெற்றி விழா எடுத்துட்டோம்.
இந்த விழா, உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய விழா. எதுல இருந்து கடன் பாக்கி இருக்குன்னா, என்னுடைய ‘அவள் ஒரு தொடர்கதை’ல இருந்து பாக்கி இருக்கு. பல காம்ப்ரமைஸ் செய்துக்கிட்டு பண்ற படங்களை விட இந்த மாதிரி ஒரு நல்ல படத்தை மக்களிடம் எடுத்துக் கொண்டு சென்றதற்காக, எங்களுடைய திருப்திக்கும், உங்களுடைய திருப்திக்கும் ஆளாவது ஒரு வியத்தகு ஆச்சரியமான விஷயம். இதைக் கொண்டாடுவதற்கு முன் இதை கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை எனக்கிருக்கிறது.
அடுத்து ஒரு நல்ல படத்துக்கும் நீங்க இதே மாதிரி செய்யணும்கற ஒரு அச்சாரம்தான் இது. என் படத்துக்குதான் செய்யணும்கறது இல்லை, நல்ல தமிழ்ப் படத்தைத் தூக்கிப் பிடியுங்கள். அப்படிச் செய்தால் மீண்டும் மீண்டும் நல்ல படங்களைச் செய்யும் வாய்ப்புகள் என்னையும் என்னுடைய சகோதரர்களை வந்தடையும். உங்களுக்கு ஊடகங்களுக்கு, பத்திரிகையளார்களுக்கு நன்றி சொல்லும் வேளையில் ரசிகர்களுக்கும் நன்றி சொன்ன மாதிரி ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்திருக்கிறோம்.
இன்னுமொரு ஆளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நல்ல நம்பிக்கையுள்ள கலைஞனால்தான் இன்னொரு நடிகனைப் பாராட்ட முடியும். மோகன்லால் அவர்கள் சொன்னதாக கேள்விப்பட்டது, இந்தப் படம் தமிழ்ல பண்ணாங்கன்னா கமல் பண்ணா நல்லா இருக்கும்னு அவர் சொல்லியிருக்காரு. அந்தப் பெருந்தன்மைக்காகவும், பரிந்துரைக்காகவும் நான் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
எதுக்கு இப்படி எல்லாருக்கும் நன்றி சொல்லிட்டிருக்கீங்க, உங்களுக்கு பட சான்ஸ் குறைஞ்சிடுச்சான்னு நீங்க கேக்கலாம். இந்த மாதிரி பட சான்ஸ் கிடைப்பது எல்லா நடிகர்களுக்குமே குறைவு. அம்மாதிரி கிடைக்கும் போது அதை நாங்களும் கொண்டாட வேண்டும் நீங்களும் கொண்டாட வேண்டும். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.
காலம் தாழ்ந்து சில படங்கள் கொண்டாடப்படும், அது யாருக்கும் பிரயோஜனமில்லை, உங்களுக்கும் சேர்த்து. பல இணையதளங்களில் பல பழைய படங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை அப்ப சொல்லியிருந்தால் தயாரிப்பாளர் சந்தோஷமா இருந்திருப்பாரு, நான் அதை விட சந்தோஷமா இருந்திருப்பேன்.
காலத்தே செய்த நல்ல செயல் இது, அன்றே செய்த இந்த நன்று, எங்களையும், நல்ல தமிழ் சினிமாவையும் வாழ வைக்கும் என்று நம்புகிறேன்.
இங்கே இப்போது இல்லாத ஜெயமோகன் அவர்களும், சுகா அவர்களும் நட்புடன் எந்த சுய செருக்கையும் காட்டிக் கொள்ளாமல் மிக சந்தோஷமாக, நண்பர்களாக இருந்து படத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே தங்களது விவாதங்களை பயன்படுத்திக் கொண்டனர்.
ஜீது ஜோசப் ஒரு உன்னதமான கலைஞர், அது எனக்குப் பிடித்திருந்தது. இன்னும் பல படங்கள் இத்தனை பேரிடமும் சேர்ந்து செய்ய வேண்டும் என்ற ஆசை என் மனதில் வளர்ந்து விட்டது. தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. மழை, வெயில் அனைத்தையும் கடந்து, வெவ்வேறு ஊர்கள் சென்று இந்தப் படத்தை நடத்தி முடித்தோம்.
நிஜமாகவே நான் இந்தக் கலைஞர்களை மதிக்கிறேன் என்பதற்கு இதே லைன் புரொடக்ஷன் யூனிட், அடுத்து என்னுடைய ‘தூங்காவனம்’ படத்திலும் வேலை செய்கிறார்கள் என்பதுதான் இதற்கு சாட்சி.
இந்தப் படத்தில் நடித்த பல கலைஞர்கள் நடிப்பார்கள் என்பதற்கு ரசிகர்கள் கொடுத்த பலம், வெளியே போய் தேடாமல் நம்முடனே இருக்கிறார்கள் என்பதை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.
இம்மாதிரி ஒரு படம் வெற்றி பெற வேண்டுமென்றால் தொழில்நுட்பக் கலைஞர்கள் மட்டுமல்லாது, நடித்துள்ள அனைவரும் அதை திறமையாக எடுத்துக் கொண்டு செய்தார்கள். அதற்கெல்லாம் பரிசாக உங்களுடைய கரகோஷம் வந்தது, எங்களுக்கு சந்தோஷம், எங்களை பெருமைப்படுத்தி விட்டீர்கள், அதற்கு நன்றி, வணக்கம்,” என கமல்ஹாசன் பேசினார்.