தமிழ்த் திரையுலகில் முதல் நாள் வசூலில் ‘வேதாளம்’ திரைப்படம் புதிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது.
நேற்று உலகம் முழுவதும் வெளியான ‘வேதாளம்’ திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 17 கோடி வரையிலும் வெளிநாடுகளில் 3 கோடி வரையிலும் இப்படம் வசூல் செய்திருக்கலாம் என்கிறார்கள்.
நேற்று மட்டும் பெரும்பாலான திரையரங்குகளில் அதிகாலை காட்சி, முன் காலை காட்சி ஆகியவற்றைச் சேர்த்து ஆறு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. அஜித் ரசிகர்களின் பெரும் ஆர்வத்தால் நேற்று அனைத்துத் திரையரங்குகளும் ஹவுஸ்ஃபுல் ஆகியிருக்கின்றன.
இதற்கு முன் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’, விஜய் நடித்த ‘கத்தி’ ஆகிய படங்களின் முதல் நாள் வசூல் சுமார் 12 கோடிரூபாய் ஆக இருந்தது. இப்போது அந்தப் படங்களின் சாதனையை ‘வேதாளம்’ முறியடித்துள்ளது.
இந்த வாரத்திற்குள் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே போகும் என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.