தனுஷ் நடித்துள்ள ‘தங்க மகன்’ படம் வரும் 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
‘தங்க மகன்’ படத்திற்கு முதலில் ‘தமிழ் மகன்’ என்றுதான் பெயர் வைத்தோம். பின்னர்தான் மாற்றினோம் என்று தனுஷ் கூறினார்.
‘‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கும் இந்தப் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரொம்ப நாட்களாக பெயர் வைக்காததால் அப்படி ஒரு செய்தி பரவிவிட்டது. அதே குழுவுடன் வேலை பார்த்ததால் அப்படி ஒரு பேச்சு வந்தது. இந்தப் படம் புதிய கதையுடன், புதிய கதாபாத்திரங்களுடன், புதிய கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயினராக இருக்கும். என் ரசிகர்களுக்கு மட்டுமில்லாம, இளைஞர்கள், குடும்பத்தினர், குழந்தைகள் இப்படி குடும்பத்தோடவும் பார்க்கக் கூடிய படமா இருக்கும்.
‘தங்க மகன்’ படத்திற்கு முதலில் ‘தமிழ் மகன்’ என்று தான் பெயர் வைத்தோம். எனது பாத்திரத்தின் பெயர் தமிழ் என்பதால் சரியாக இருக்கும் என நினைத்தோம். ஆனால், தயாரிப்பாளர் தான் ‘தங்கமகன்’ என வைத்தால் சரியாக இருக்கும் என்றார், உடனே மாற்றினோம். தயாரிப்பாளரின் ஆசையை நிறைவேற்று தானே ஒவ்வொரு படக்குழுவின் கடமை.
‘காதல் கொண்டேன்’ படத்தின் கதையை எனது அண்ணன் பல முன்னணி நடிகர்களிடம் தெரிவித்தார். யாருமே அதில் நடிக்க முன்வரவில்லை. அப்போது மிகுந்த வருத்தமாக “அனைவருக்குமே முதல் வாய்ப்பு என்பது தான் மிகவும் கடினம். ஒரு காலத்தில் நாம் இருவரும் பெரிய ஆளாகி விட்டோம் என்றால், நாம் புதிதாக வருபவர்களுக்கு உதவ வேண்டும்” என்று தெரிவித்தார். அவர் கூறிய வார்த்தைகளை நான் தயாரிக்கும் படங்களில் பின்பற்றி வருகிறேன். ஒவ்வொரு படத்துக்கு ஒவ்வொரு அறிமுகம் கண்டிப்பாக இருக்கும்.
இப்போது ‘தங்கமகன்’ படத்தில் ஒளிப்பதிவாளர் அறிமுகம் தான். புதியவர்களை உற்சாகப்படுத்தி அறிமுகப்படுத்தும் ஒரு பாலமாக வுண்டர்பார் நிறுவனம் எப்போதுமே இருக்கும்.
பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அந்தப் படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளதால் பின் தயாரிப்புப் பணிகளுக்காக ஆறு மாதம் தேவைப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் அந்தப் படம் வெளிவரும்.
அடுத்ததாக துரை.செந்தில்குமார் இயக்கத்தில் த்ரிஷா, ஷாமிலி, எஸ்.ஏ.சந்திரசேகர் சார் ஆகியரோடு ஒரு படம் நடிக்கிறேன். அப்படத்துக்கு ‘கொடி’ என்ற தலைப்பு நிரந்தரமான தலைப்பு இல்லை. படப்பிடிப்புக்கான ஒரு தலைப்புதான் அது.
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில் நடிக்க உள்ளேன். அடுத்தாண்டு ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கும். அதனைத் தொடர்ந்து ஒரு இந்திப் படத்தில் பண்றேன். இவ்வளவு தான் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ‘விஐபி 2 மற்றும் மாரி 2’ ஆகியவற்றிலும் நடிக்க உள்ளேன். மற்ற படங்கள் அனைத்துமே பேசி வருகிறேன் அவ்வளவு தான்.
எனது தயாரிப்பில் அமலாபால், ரேவதி நடிப்பில் அஸ்வினி ஐயர் இயக்கும் ஒரு இந்திப் பட ரீமேக்கை தயாரிக்கிறேன். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கிறேன். மேலும், எனது நிறுவனத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் ‘விசாரணை’ ஜனவரி இறுதியில் வெளியாக இருக்கிறது,” என்றார் தனுஷ்.