சிம்பு, அனிருத் இணைந்து உருவாக்கிய ‘பீப் சாங்’ என்றழைக்கப்படும் பாடலுக்கு பெண்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பல அமைப்புகள் அவர்களுக்கெதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. கோவையில் காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, சிம்புவுக்கும், அனிருத்துக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. 19ம் தேதி கோவை காவல் ஆணையர் முன் அவர்கள் ஆஜராக வேண்டும் என அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே சற்று முன் டிவிட்டரில் சிம்பு ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில்,
“சட்டத்தை நிச்சயமாக எதிர் கொள்வேன், எதையும் மறைக்கவோ, ஓடவோ இல்லை. கடவுளை நம்புகிறேன். நேர்மை, உண்மை மீது திடமான நம்பிக்கை வைத்துள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.