புதிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பிஸியாக இருந்து கொண்டிருக்கும் நடிகர் சத்யராஜ்.

அடியாள் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, வில்லனாக நடிக்க ஆரம்பித்து கதாநாயகனாக உயர்ந்து, பின்னர் குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்து இன்று வரை தன்னை பிஸியாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்.

‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு தெலுங்கிலும் தொடர்ந்து பிஸியாக இருப்பவர் சத்யராஜ். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘ஜாக்சன் துரை’ படம் 25வது நாளைத் தொட்டிருக்கிறது.

அடுத்து அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். கடத்தலை மையமாகக் கொண்டு த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படம் ஒரு ‘எஃப்-எம்’ வானொலி நிலையத்தில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வானொலி நிலையத்தின் தலைமை அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.

“இயக்குனர் கார்த்திக் என்னிடம் வந்து கதையை சொன்ன அடுத்த நொடியே, இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதை என்னைக் கவர்ந்துவிட்டது. இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் புதியவராக இருந்தாலும், அவரின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இந்த படத்திற்கு பக்கபலமாக செயல்பட்டு வருகிறது.

ஒரு ரேடியோ ஸ்டேஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கூர்ந்து ஆராய்ந்து, அதை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் யுக்தியை கார்த்திக் கையாண்டு வருகிறார். ஒரு ரேடியோ ஸ்டேஷனின் தலைமை அதிகாரியாக நான் இந்த படத்தில் நடித்து வருகிறேன். தொகுப்பாளர்களும், எப் எம் நேயர்களும் ஓயாமல் தொடர்ந்து பேசி கொண்டிருப்பதும், அதை நான் கண்காணிப்பதும், எனக்கு புதுவித அனுபவமாய் இருந்து வருகிறது.

இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இந்த கதாப்பாத்திரம் இருக்கும். புதுமையான கதாபாத்திரம், புதுமையான கதைக்களம் என எல்லா விதத்திலும் புதுமுக இயக்குனர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவது மேலும் சிறப்பு. தொடர்ந்து புதுமுக இயக்குனர்களுடன் பணிபுரிவதை நான் பெரிதும் விரும்புகிறேன், என்கிறார் சத்யராஜ்.

“இந்த படத்தின் கதையானது ஒரு ரேடியோ ஸ்டேஷனை மையமாக கொண்டு தான் நகரும். ஒரு ரேடியோ தொகுப்பாளருக்கும், கடத்தல்காரனுக்கும் இடையே நடக்கும் சுவராசியமான சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதைக் கரு. சத்யராஜ் சார் என்றாலே நையாண்டியான வசனங்கள் தான். அந்த வகையில், இந்த படத்தில் சத்யராஜ் சாரின் நையாண்டியான வசனங்களை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்க்கலாம்,” என்கிறார் இயக்குனர் கார்த்திக்.

சந்தோஷ் இசையமைக்க, ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பாக சத்யராஜ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

 

Read Previous

Vijay TV – Adhu Idhu Yedhu crossed 350 episodes

Read Next

Mupparimanam – Official Teaser