உலக வரலாற்றில் முதல் முறையாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்ப் படமாக அமைந்த ‘கபாலி’ படம் இரண்டு தினங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
சுமார் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் நாள் சிறப்புக் காட்சிகள், மற்றும் அன்றைய தினக் காட்சிகள் அனைத்திற்குமே பல்வேறு கட்டணங்களில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக அனைத்து மீடியாக்களிலும் செய்திகள் வெளியானது.
வெளியீட்டிற்கு முன்பே முதல் நாள் வசூலில் கபாலி படம் மிகப் பெரும் சாதனையைப் படைக்கம் என்று பேசப்பட்டது.
அதன்படி, ‘கபாலி’ படம் இதுவரை வெளிவந்த எந்த இந்தியப் படங்களும் செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கலாம் என அனைத்து ‘பாக்ஸ் ஆபீஸ்’ செய்திகளை வெளியிடும் மீடியாக்கள் தெரிவித்துள்ளன.
முதல் நாள் நிகர வசூல் 45 கோடி வசூல் என ஒரு செய்தியும், 54 கோடி என மற்றொரு செய்தியும், முதல் நாள் மொத்த வசூல் 90 கோடி ரூபாய் எனவும், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து 100 கோடி அல்லது அதற்கு மேலும் ஆகியிருக்கலாம் என மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளன.
ஹிந்தித் திரைப்படங்கள்தான் பொதுவாக முதல் நாள் வசூலில் அதிக சாதனை படைக்கும் இந்தியத் திரைப்படங்களாக இருக்கும்.
“தில்வாலே, தூம் 3, சுல்தான்” ஆகிய ஹிந்திப் படங்களின் முதல் நாள் வசூலை தமிழ்ப் படமான ‘கபாலி’ படம் முறியடித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் மட்டும் முதல் நாள் வசூலாக 17 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாரால் மட்டுமே இப்படிப்பட்ட சாதனைகளைப் புரிய முடியும் என ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில், சில வீடியோ விமர்சனங்களில் வேண்டுமென்றே பரப்பப்பட்ட எதிர்மறை கருத்துக்களையும் மீறி ‘கபாலி’ படத்திற்கு குடும்பத்து ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக இருக்கிறது என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் இந்த இரண்டு நாள் வசூலையும் சேர்த்தால் ‘கபாலி’ படத்தின் சாதனை உச்ச சாதனையை ஏற்படுத்தும் என்கிறார்கள்.