‘குக்கூ’ படத்திற்குப் பிறகு ராஜு முருகன் இயக்கத்தில் வரும் 12ம் தேதி வெளிவர உள்ள படம் ‘ஜோக்கர்’.
இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மு.ராமசாமி, ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டிரைலரும், ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பாடலும் ஏற்கெனவே பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாக இருக்கிறது.
இது வழக்கமான தமிழ்த் திரைப்படம் அல்ல, வேறு மாதிரியான ஒரு திரைப்படம் என்பதை அவையிரண்டும் ஏற்கெனவே ரசிகர்களுக்குப் புரிய வைத்தன.
நாட்டில் உள்ள இன்றைய நிகழ்வை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லும் படமாக இந்தப் படம் இருக்கப் போகிறது என்பதை இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவரும் சொல்லும் போது உணர முடிகிறது.
தமிழ் சினிமாவில் மதுரை, கோவை, நெல்லை, சென்னை ஆகிய வட்டாரப் படங்கள்தான் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. வட தமிழ்நாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் மிகவும் குறைவுதான். அந்தக் குறையை இந்தப் படம் போக்கிவிடும்.
தர்மபுரி மாவட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. சராசரி மக்களின் வாழ்வியலை எடுத்துக் காட்டும் ஒரு படமாக இந்தப் படம் இருக்கப் போவது நிச்சயம். படம் வெளிவந்த பின்பு திரைப்பட ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், சாமானிய மக்களிடமும் இந்தப் படம் ஒரு அதிர்வலையை உண்டு பண்ணும் என்பது உறுதி.
படம் பற்றி இயக்குனர் ராஜு முருகன் கூறியதாவது,
“சமூக வலைதளங்களில் அரசியலை தையரியமாகப் பேசும் அளவிற்கு மக்கள் முன்னேறி உள்ளனர். ஆனால் சினிமாவில் அது இன்னும் வரவில்லை. ஏன் இங்கு மட்டும் நுழையவில்லை என யோசித்து இந்தப் படத்தை மிகத் தைரியமாக எடுக்க வேண்டும் என இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டை தயார் செய்தேன். கலைஞர்களை ஜாதி, அரசியல் ரீதியாக அணுகக்கூடாது. அவர்களை கலைஞர்களாக தான் பார்க்க வேண்டும்.
படத்துக்கு நாங்க நினைச்ச மாதிரி எந்த பிரச்சனையும் இல்லை. சென்சார் கிடைக்காதுன்னு தான் நினைச்சோம். ஆனால் யு சர்டிபிகேட் கிடைச்சது. அரசியல் கட்சிகள் எதுவும் எங்களை மிரட்ட வில்லை. சென்சார் அதிகாரிகள் கெட்ட வார்த்தைகள் மற்றும் வன்முறை காட்சிக்கு மட்டும் கட் கொடுத்தனர். எல்லோருமே அரசியல் பேசணும் என்கிற கருத்தை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது தேர்தல் சமயத்தில் வருவதை விட சுதந்திர தினத்தில் வருவது இன்னும் நல்லது,” என்கிறார் இயக்குனர்.
படத்தின் பெயர்தான் ‘ஜோக்கர்’, ஆனால் அந்த ஜோக்கர் செய்வது ‘ஜோக்’ ஆன விஷயங்கள் அல்ல….