அதர்வா ஜோடியாக நயன்தாரா…வா என அதிர்சியடைந்துவிடாதீர்கள். அதர்வா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாராவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதர்வா ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் இந்தப் படத்தின் கதையைக் கேட்டதுமே நயன்தாரா நடிக்க சம்மதித்துவிட்டாராம்.
அஜய் ஞானமுத்து இதற்கு முன் இயக்கிய ‘டிமான்டி காலனி’ படம் வெற்றிப் பட வரிசையில் இடம் பெற்ற பேய்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இமைக்கா நொடிகள்’ படமும் ஒரு த்ரில்லர் படம்தானாம். படத்தின் கதையை எழுதியதுமே அந்தக் கதையில் நயன்தாராவைத் தவிர வேறு யாரும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்கிறார் இயக்குனர். அந்த அளவிற்கு இன்றைய இளம் இயக்குனர்கள், நடிகர்கள் மத்தியல் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் நயன்தாரா.
படத்தின் வில்லனாக ஒரு முக்கிய நடிகர் நடிக்க உள்ளாராம். மிகப் பெரிய திறமைசாலியான நயன்தாராவுடன் நடிக்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் அதர்வா. அவருடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தால் இன்னும் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பாரோ..
எத்தனை புதுமுக நடிகைகள் வந்தாலும் நயன்தாராவின் வெற்றி நடைப் பயணத்தை தமிழ்த் திரையுலகத்தில் யாராலும் தடுக்க முடியாது போலிருக்கிறது.