இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டணி நாயகனாக அறிமுகமான படம் ‘நான்’.
அந்தப் படத்தில் விஜய் ஆண்டனியில் இயக்குனராக அறிமுகப்படுத்தப்பட்டவர் ஜீவா சங்கர். இப்போது ஜீவா சங்கர் – விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ள படம்தான் ‘எமன்’.
‘பிச்சைக்காரன்’ படத்திற்குப் பிறகு வினியோகஸ்தர்களின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ள விஜய் ஆண்டணி, ‘சைத்தான்’ படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார்.
இப்போது ‘எமன்’ படத்தில் மற்றுமொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ‘எமன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஆண்டனியின் கதை, மற்றும் கதாபாத்திரத் தேர்வு குறித்து நடிகர் விஜய் சேதுபதி உட்பட விழாவில் கலந்து கொண்ட அனைவருமே பாராட்டிப் பேசினர்.
விஜய் சேதுபதி பேசுகையில், “அமர காவியம்’ படத்தைப் பார்த்த பின் இயக்குனர் ஜீவா சங்கரை அழைத்து பாராட்டினேன். எனக்கும் ஒரு கதை சொல்லுங்க என்றேன். அப்போது அவர் சொன்ன கதைதான் ‘எமன்’. ஆனால், என்னால் அந்தக் கதையில் நடிக்க முடியாமல் போனது. இப்போது அந்தக் கதையில் விஜய் ஆண்டனி நடித்திருப்பது மிகவும் பொருத்தமான ஒன்று.
இந்த படத்தோட போஸ்டர்லாம் பார்த்து எனக்கு பொறாமைலாம் வரலை, சந்தோஷமா இருக்கு. விஜய் ஆண்டனி சார் பார்க்க சைலன்டா இருக்காரு, ஆனா ஸ்ட்ராங்கா இருக்காரு. ரொம்ப இன்டன்ஸா நடிக்கிறாரு, அவரோட எக்ஸ்பிரஷன்ஸ்லாம் ஆழமா இருக்கு.
விஜய் ஆன்டனி சார் மூவியோட கலெக்ஷன்ஸ்னு வந்தால் அதுல அவரோட எல்லா படமும் இருக்கும்னு நம்பறேன். இது நல்ல படம், இது நல்லா இல்லாத படம்னு கணக்குல போகாதுன்னு நம்பறேன். அவருக்கு என்னோட வாழ்த்துகள்,” என விஜய்சேதுபதி வாழ்த்திப் பேசினார்.