‘சிவலிங்கா’வில் நான் 4வது ஹீரோதான் – ராகவா லாரன்ஸ்

டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் தமன் இசையமைப்பில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, சக்தி வாசு மற்றும் பலர் நடிக்கும் ‘சிவலிங்கா’ படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய ராகவா லாரன்ஸ் இப்படத்தில் நான் 4வது ஹீரோதான் என்றார்.

“நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆவலில்தான் இப்படத்தில் நடித்தேன். இப்படத்தில் முதல் நாயகன் என்று சொன்னால் அவர் ரித்திகா சிங் தான். அந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.

இரண்டாவது நாயகன் என்று சொன்னால் வடிவேலு. அவருடைய ரசிகன் நான், இந்தப் படத்தில் நம்மை நன்றாக சிரிக்க வைப்பார்.

மூன்றாவது நாயகன் சக்தி வாசு. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் கண் கலங்க வைத்து விடுவார்.

நான் இந்தப் படத்தின் நான்காவது நாயகன்தான். இயக்குனர் பி. வாசு என்னுடைய தலைவர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து பல படங்களை இயக்கியவர். அவருடைய இயக்கத்தில் நடிக்க முதலில் கொஞ்சம் பயமாகவே இருந்தது.

‘சிவலிங்கா’ படம் அனைத்து ரசிகர்களையும் கவரும் ஒரு படமாக இருக்கும்,” என்றார்.

படத்தின் இடைவேளைக் காட்சியின் படப்பிடிப்பின் போது ரித்திகா சிங்கின் நடிப்பைப் பார்த்த ராகவா லாரன்ஸ் மறுநாளே இயக்குனர் பி.வாசுவுக்கு தங்க மோதிரம் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார்.

“நான் இதுவரை எவ்வளவோ பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்துமே படங்களின் வெற்றி விழாக்களில்தான் கிடைக்கும். ஆனால், படப்பிடிப்பு நடக்கும் போதே எனக்குக் கிடைத்த முதல் பரிசு ராகவா லாரன்ஸ் அளித்த மோதிரம்தான்,” என அந்தப் பரிசைப் பற்றிப் பெருமையாகச் சொன்னார் பி.வாசு.

படத்தின் இரண்டு பாடல்களை நிகழ்ச்சியில் போட்டுக் காட்டினார்கள். தமனின் இசையில் இரண்டு பாடல்களுமே ஹிட் ரகம்தான்.

ரித்திகா சிங்கா அது என ஆச்சரியப்படும் அளவிற்கு அப்படி ஒரு ‘ஆட்டம்’ ஆடியிருக்கிறார்.

அக்ராஸ் பிலிம்ஸ் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

Read Previous

‘பரதம் 5000’ – 5000 பரதக் கலைஞர்கள் பங்கேற்கும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி

Read Next

மீண்டும் அருண் விஜய் – மகிழ் திருமேனி கூட்டணி