நம் மக்களிடம் பேச்சுத் தமிழிலும், பயன்படுத்தும் தமிழிலும் நிறையவே மாற்றங்கள் வந்துவிட்டன.
உடலால் ஊனமுற்றவர்களைக் கூட ஊனமுற்றவர்கள் என்று சொல்வதில்லை, மாறாக, மாற்றுத் திறனாளிகள் என அவர்களுக்கும் மரியாதை கொடுத்து அழைப்பது தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை.
ஊமை என்றோ, குருடன் என்றோ, செவிடன் என்றோ, குள்ளன் என்றோ இந்தக் காலத்தில் யாரும் பயன்படுத்துவதில்லை. வாய் பேச முடியாதவர், பார்வையற்றவர், காது கேளாதவர், உயரம் குறைவானவர் என அனைத்திலும் மரியாதையான மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள் நம் தமிழர்கள்.
சாதாரண மக்களே அப்படியிருக்கும் போது, தன்னை உலக நாயகன் எனச் சொல்லிக் கொள்ளும் கமல்ஹாசன் ‘குள்ளன்’ என பல கோடி மக்கள் பார்க்கும் வகையில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருப்பது நியாயமா ?.
விஜய் டிவியில் விரைவில் கமல்ஹசான் நடத்த உள்ள ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கான புரோமோ ஒன்று கடந்த வாரம் வெளியிடப்பட்டது. விஜய் டிவியிலும் ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் வந்து கொண்டிருக்கிறது.
அதில் கமல்ஹாசன் பேசும் போது, “சினிமாவுல நிறைய வேஷம் போட்டிருக்கேன். நாயகனாக, வில்லனா, குள்ளனா, காதலனாக, பெண்ணாக, அமெரிக்கனாக, இந்தியனா வேஷமும் போட்டிருக்கேன், வாழ்ந்துட்டும் இருக்கேன்,” என ‘குள்ளனா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்.
யாருக்குமே புரியாத தமிழில் அடிக்கடி தனக்கு தமிழில் நல்ல ஞானம் உள்ளது போல காட்டிக் கொள்ளும் கமல்ஹாசன் இந்தக் ‘குள்ளன்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருப்பதைத் தவிர்த்திருக்கலாமே…?.
BIGG BOSS – விரைவில்… – Promo