பீச்சாங்கை – விமர்சனம்

தமிழ் சினிமா டிஜிட்டல் யுகத்திற்கு மாறிய பிறகு பல இளைஞர்கள் சினிமாவுக்குள் வந்துவிட்டனர். ஆனால், அதில் ஒரு சிலர் மட்டுமே வித்தியாசமான படங்களைக் கொடுக்கிறார்கள். சிலரோ வித்தியாசம் என்று நினைத்துக் கொண்டு எது எதையோ கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘பீச்சாங்கை’ என பெயர் வைத்ததிலேயே ஒரு பொறுப்பற்ற தன்மை உள்ளது. சென்னைத் தமிழில் கொச்சையாகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை. எத்தனையோ கோடி பேரைச் சென்று சேரும் படத்திற்கு இப்படி ஒரு தலைப்பு ஏன் ?.

பிக்பாக்கெட் அடிப்பதைத் தொழிலாகக் கொண்ட ஆர்.எஸ். கார்த்திக் ஒரு சந்தர்ப்பத்தில் போலீசிடம் தப்பிக்கும் போது விபத்தில் தலையில் அடிபடுகிறது. அதன் பின் அவர் நினைப்பதை அவரது இடது கை செய்ய மறுக்கிறது. இருந்தாலும் அவரைத் தேடி ஒரு பெரிய திருட்டு வேலை வருகிறது. அதை அவர் செய்து முடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு பிக்பாக்கெட்டின் கதையை மட்டும் சொல்லியிருந்தால் பரவாயில்லை. அதைவிட்டுவிட்டு, காமெடி செய்கிறோம் எனச் சொல்லித் திரியும் ஒரு மொக்கை ரவுடிக் கூட்டம், தன் போனுக்காக அலையும் ஒரு அரசியல்வாதி என பல கதாபாத்திரங்களால் பீச்சாங்கையின் கதை வெவ்வேறு பக்கங்களில் பயணிக்கிறது.

அறிமுக நாயகன் ஆர்.எஸ். கார்த்திக் முதல் படத்திலேயே ஒரு ரிஸ்க் ஆன கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடித்திருக்கிறார். அவர் மட்டும் நடித்தால் போதாது அவரது பீச்சாங்கையும் சேர்ந்து நடிக்க வேண்டும். முகத்தையும், கையையும் மாறி, மாறி நடிக்க வைத்திருப்பதில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

அவர் காதலியாக அஞ்சலி ராவ், சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். அரசியல்வாதி நல்லதம்பியாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, முயன்றால் வில்லன் நடிகர்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கலாம். மொக்கை ரவுடி கூட்டம் என வரும் அந்த நால்வர் நம் பொறுமையை அதிகமாகவே சோதிக்கிறார்கள்.

டீசரையும், டிரைலரையும் மட்டும் சிறப்பாக உருவாக்கினால் போதாது, அதற்கேற்றபடி படத்தையும் உருவாக்க வேண்டும் என்பது இயக்குனருக்குப் புரிய வேண்டும்.

Read Previous

தங்கரதம் – விமர்சனம்

Read Next

உரு – விமர்சனம்