ஜுலை 1ம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தபட உள்ளதால் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களும் உயரும்.
ஆனால், எவ்வளவு கட்டணத்தை தியேட்டர்கள் உயர்த்த உள்ளன என்பது பற்றி இதுவரை தெளிவாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
சென்னையில் சத்யம், லுக்ஸ், பலாசோ உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 120 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட் இனி 153 ரூபாய்க்கு விற்கப்படலாம் என்கிறார்கள்.
அதே சமயம், தமிழ்நாடு அரசு நகராட்சி வரியாக 30 சதவீதம் வரியை விதித்தால் அதற்கு மேலும் கட்டணங்கள் உயரும் என திரையரங்க வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். அதனால், தமிழ்நாடு அரசு நகராட்சி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பக்கத்து மாநிலங்கள் நகராட்சி வரியை அமல்படுத்தவில்லை. அது போலவே, தமிழ்நாட்டிலும் வேண்டும் என தியேட்டர்காரர்கள் கேட்கிறார்கள்.
ஜுலை 1 முதல் விதிக்கப்பட உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து திரையுலகத்தைச் சேர்ந்த சங்கங்கள் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்கிறார்கள்.
ஏற்கெனவே, தியேட்டர்களுக்கு பொது மக்கள் வருவது குறைந்து வரும் நிலையில் இந்த டிக்கெட்ட கட்டண உயர்வு மேலும் பாதிப்படைய வைக்கும் என்றே அவர்கள் கருதுகிறார்கள்.
ஏற்கெனவே மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்குச் சென்றால் பார்க்கிங் கட்டணம், பாப்கார்ன் விலை ஆகியவற்றிற்குப் பயந்தே பலரும் தியேட்டர்களுக்குச் செல்வதில்லை.
தற்போது டிக்கெட் கட்டணமும் உயர்ந்தால் நல்ல படம் வந்தால் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட விரைவில் ஏதோ ஒரு டிவியில் அந்தப் படத்தைப் போடுவார்கள் என தியேட்டர் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார்கள்.
பல முன்னணி தியேட்டர்கள் ஜுலை 1ம் தேதிக்கான முன்பதிவை இன்னமும் திறக்காமல் வைத்துள்ளன. டிக்கெட் விலை நிர்ணயிப்பதில் உள்ள குழப்பங்களே இதற்குக் காரணம்.