ரஜினியின் ‘2.0’ படத்தை விளம்பரப்படுத்த 100 அடி உயர பலூன் லாஸ் ஏஞ்சல்ஸில் பறக்க விடப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷயகுமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘2.0’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கப்பட்டது.
முதல் நிகழ்வாக ‘2.0’ விளம்பரங்கள் அடங்கிய 100 அடி உயர வெப்பக் காற்று பலூன் பறக்கவிடப்பட்டது. இந்நிகழ்வு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் லேக் பார்க்கில் நடைபெற்றது. இதில் ‘2.0’ படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தலைமை செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம் கலந்து கொண்டார்.
இதே பலூன் லண்டன், துபாய், சான்பிரான்சிஸ்கோ, தெற்காசிய நாடுகள், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மேல் பறக்கவுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு நகரங்களுக்கு இந்த பலூனைக் கொண்டு வர தயாரிப்பளர்கள் திட்டமிட்டுள்ளனர். அப்போது நாடு முழுவதும் உள்ள பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் இந்த பலூன் சவாரியில் பங்குபெறவுள்ளார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜனவரி 2018ம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தை ஹாலிவுட் படங்களுக்கு நிகராக விளம்பரப்படுத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.