‘வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு” உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசீந்திரன் தற்போது இயக்கி வரும் பத்தாவது படத்திற்கு ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’ என்ற பெயரை வைத்துள்ளார்.
படத்தின் பெயர் பற்றிய அறிவிப்புக்கான விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் சுசீந்திரனின் அப்பா நல்லுசாமி படத்தின் பெயரை அறிவித்தார்.
இப்படத்தில் ‘மாநகரம்’ படத்தின் நாயகன் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், சூரி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
நேற்று நடந்த விழாவில் கோவையில் 20 ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு பல மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து மறைந்த டாக்டர் பாலசுப்ரமணியம் குடும்பத்தினரை கௌரவித்தார்கள்.
‘நெஞ்சிலே துணிவிருந்தால்’ கதையும் மருத்துவ சேவை பற்றிய படம்தானாம்.
விழாவில் இயக்குனர் சுசீந்திரன், இசையமைப்பாளர் இமான், நடிகர்கள் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, அருள்தாஸ், ஹரீஷ் உத்தமன், நடிகை துளசி தயாரிப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.