ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்ட ‘ஒன் ஹார்ட்’ என்ற படம் வரும் 8ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படம் பற்றியும், அவருடைய இசையமைப்பு பற்றியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
“இப்போதெல்லாம் இசையில் இரைச்சல்தான் அதிகம் இருக்கிறது. இசையை உருவாக்க நேரம் இருப்பதில்லை. முன்பு போல லைவ் ஆக இசைக் கருவிகளால் இசை உருவாக்கப்படுவதில்லை.
மெலோடி, கர்நாடிக் பாடல்கள் வருவது குறைந்துவிட்டது. கர்நாடிக் பாடல்களுக்கு அதற்கேற்ற மாதிரி படங்கள் வர வேண்டும். அப்போதுதான் அம்மாதிரியான பாடல்கள் வரும். ஆனால், யாரும் அது போன்ற படங்களைத் தயாரிக்க தயாராக இல்லை.
என் படங்களின் பாடல்களை உருவாக்கி ஒரு வாரத்திற்கு நான் கேட்டுக் கொண்டிருப்பேன். பல முறை திருத்துவேன். அதன் பின் எனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அந்தப் பாடலை வெளியில் விடுவேன்.
ஒரு சமையல்காரர் அவருடைய சமையலை முதலில் ருசித்துப் பார்ப்பார். அது போல என் இசையை நான் முதலில் ருசித்துப் பார்ப்பேன். பிடிக்கவில்லை என்றால் மக்களுக்குக் கொடுக்க மாட்டேன். புதிதாக இருந்தால் மட்டுமே அந்தப் பாடலை பயன்படுத்துவேன். ஏனென்றால், ரசிகர்கள் ஒரு பாடலைப் பல முறை கேட்கிறார்கள்.
இன்னும் டாப் 5 இடத்தில் நான் வர வேண்டும், என் பாடல்கள் பேசப்பட வேண்டும் என்று நான் விரும்பவில்லை. புது முயற்சிகளைச் செய்ய ஆசைப்படுகிறேன், இன்னமும கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.