கல்யாண விருந்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாயகன்

ஜெயன்ட் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது.

‘குக்கூ, ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜுமுருகன் இப்படத்திற்கு கதை, வசனத்தை எழுதுகிறார். திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படம் பற்றி ராஜு முருகன் கூறியதாவது,

“எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வது போலத்தான் வாழ்க்கையிலும் சில ஈரமான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிறது. அடர்த்தியான கதை, எளிமையும் அழகியலுமான திரைக்கதை, நல்ல தயாரிப்பாளர் எல்லாம் அமைந்துவிட்டது. இதன் பிறகு தொடர்ந்து கதாநாயகனுக்கான தேடலில் இருந்தோம். பலரையும் பார்த்து எதுவும் சரியாக அமையாமல் சலித்து போன நேரத்தில் நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு நானும் சரவணன் ராஜேந்திரனும் கோவை சென்றிருந்தோம். அங்கே திருமண விழாவில் சாப்பாடு நன்றாக இருந்தது.

அந்த அற்புதமான உணவுக்கு காரணமான சமையல்கலை நிபுணரான ரங்காவை நண்பர் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவரைப் பார்த்து பேசிய தருணத்தில் சட்டென்று இவர் நமது கதைக்கு சரியாக இருப்பாரோ என்று தோன்ற நான் சரவணன் ராஜேந்திரனைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். இருவருக்கும் பிடித்துப் போக அவரிடம் நடிப்பதற்கு உங்களுக்கு விருப்பமா என்று கேட்டோம். முதலில் தயங்கிய ரங்கா சிறிய மௌனத்திற்க்கு பின் ஒப்புக்கொண்டார். இப்போது அர்ப்பணிப்போடு எங்களோடு இணைந்திருக்கிறார்,” என்றார் ராஜுமுருகன்.

இந்தப் படத்தின் நாயகி ஸ்வேதா திரிபாதி. இசை ஷான் ரோல்டன், கேமரா – மாநகரம் செல்வம், ஆர்ட் டைரக்‌ஷன்- சதீஷ், ஸ்டண்ட் – பில்லா ஜெகன். இந்தப் படத்தின் தலைப்பு, மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இன்று காலை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்ற படத் துவக்க விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குடும்பத்தினர், ஆரா மகேஷ் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Read Previous

‘தொட்ரா’ – உண்மைச் சம்பவங்களின் பரபரப்பான காதல் கதை

Read Next

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த மாநிலம் – விஷால் அப்பா ஜி.கே. ரெட்டி