பொன்வண்ணன் ராஜினாமா, நடிகர் சங்கம் ஏற்கவில்லை

நடிகர் நாசர் தலைமையிலான தற்போதைய நிர்வாகிகளில் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த நடிகர் பொன்வண்ணன், இடைத் தேர்தலில் விஷால் போட்டியிட்டது குறித்த கருத்து வேறுபாட்டில் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததாக இன்று காலை முதலே செய்திகள் வெளிவந்தன.

அதன் பின் நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பொன்வண்ணன் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இன்று 11.12.2017 நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வருமாறு.

உபதலைவர் திரு. பொன்வண்ணன் அவர்கள் கொடுத்த ராஜினாமா கடிதம் பற்றி இந்த சிறப்பு செயற்குழுவில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

அவருடைய உணர்வுகளை மதிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்று தீர்மானித்து அவருடைய பணி மேலும் தொடரும் வகையில் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள அவகாசமும் கொடுக்கிறது. ..

பொதுச்செயலாளர் விஷால் அவர்கள் தம்முடைய நிலைப்பாட்டை விளக்கியும் சங்கத்தின் சட்ட விதிகளுக்கு புறம்பாக எதையும் தான் செய்யவில்லையென்றும் இம்மாதிரி சங்கடங்கள் உருவாகும் சூழலை தான் உட்பட சங்கத்தில் எவரும் உண்டாக்க கூடாது என்றும் தெரிவித்தார்,” என நாசர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Read Previous

ஜப்பான் மொழியில் வெளியாகும் ‘பாகுபலி 2’

Read Next

ஜி.வி.பிரகாஷ் பாடிக் கொடுத்த ‘எனக்கெனவே’ ஆல்பம்