CPS பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘களிறு’.
G.J.சத்யா இயக்கி வரும் இப் படத்தில் விஷ்வக் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக அனு கிருஷ்ணா, தீபா ஜெயன் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் துரை சுதாகர், நீரஜா, சிவம், ஜீவா, அப்பு, தீப்பெட்டி கணேசன், காதல் அருண், ஜான், உமா ரவி, உமா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கூறுகையில்,
“காதலிச்சாலும், கல்யாணம் பண்ணினாலும் ஒரே ஜாதியில் தான் பண்ண வேண்டும் இல்லையேல் கொலை. அப்படி நடக்கிற கொலைகள், தற்கொலைகளாக எப்படி மாற்றப்படுகின்றன. அதன் பின்னணியில் இருபவர்கள் யார் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டும் படம் தான் ‘களிறு’.
ஆணவக் கொலைகள் காதலுக்காக மட்டும் நடப்பதில்லை. நிறைய பொருளாதார ஆணவக் கொலைகளும் நடக்கின்றன, அவை மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றன.
ஆணவக் கொலை சம்பந்தமான படம் என்பதால் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கோ, ஆதிக்க சாதிகளுக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட படம் இல்லை இது. எதார்தத்தை மீறாத ஒரு கிராமத்து வாழ்வியலை காட்சிகளின் வழியியே கண் முன் நிறுத்தும் இப்படம்.
கௌரவத்திற்காக கொலை செய்கிறார்கள், அப்படி செய்த பிறகு அவர்கள் கெளரவம் திரும்பக் கிடைத்து விடுகிறதா ?. அதிகாரமும், பண பலமும் இருப்பதால்தான் இது போன்ற ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மாறவேண்டும், மாற்றப்பட வேண்டும். அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளை அடையாளப்படுத்தி, மக்களை விழிப்படையச் செய்யவே ‘களிறு’,” என்கிறார் இயக்குனர் சத்யா.