அரசியல் பற்றிய பயம் கிடையாது – ரஜினிகாந்த் பேச்சு

நடிகர் ரஜினிகாந்த், கடந்த மே மாதம் அவரது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்தார். அதைத் தொடர்ந்து இன்று மீண்டும் அவருடைய ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

டிசம்பர் 26 ஆம் தேதியான இன்று தொடங்கிய இ ந்த சந்திப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க தினமான இன்று காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.

முதல் நாளான இன்று ரஜினிகாந்துடன், அவருக்கு மிகவும் நெருக்கமான மூத்த தயாரிப்பாளர் கலைஞானம் மற்றும் இயக்குனர் மகேந்திரன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த்,

” மே மாதம் நடந்த சந்திப்புக்கு பின் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு, மழை போன்ற சில காரணங்களினால் என் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. இப்போதுதான் அந்த பொன்னான நேரம் வாய்த்துள்ளது. என் பிறந்த நாளன்று என்னை பார்க்க ரசிகர்கள் பலரும் வீட்டிற்கு வந்துள்ளனர். நான் பிறந்த நாளன்று மிகவும் தனிமையே விரும்புவேன், வெகு காலமாகவே பிறந்த நாளன்று யாரையும் சந்திப்பதில்லை. இம்முறை வழக்கத்திற்கு மாறாக நிறைய ரசிகர்கள் என்னை சந்திக்க முயன்று ஏமாற்றம் அடைந்துவிட்டனர், அதற்கு மிக வருத்தப்பட்டேன், மன்னிக்கவும். ரசிகர்கள் பலரும் என்னை சந்திக்க பெரிதும் முயல்கின்றனர். கிடைக்கின்ற நேரத்திற்கேற்ப வருங்காலத்தில் நாம் பார்த்துக் கொள்ளலாம். மேலும், சமூக வலைத்தளங்களில் இருந்து பாஸிட்டிவ்வான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

மக்களைக் காட்டிலும் ஊடக நண்பர்களே என் அரசியல் பற்றிய அறிவிப்பு குறித்து மிகவும் ஆர்வமாக உள்ளனர். அதைப் பற்றிய பல்வேறு விமர்சனங்களும் எழுகின்றன. அரசியல் பற்றிய பயம் எனக்கு ஒரு போதும் கிடையாது, ஏனென்றால் அரசியல் எனக்கு புதிதல்ல. யுத்தத்தில் வேகத்தைக் காட்டிலும் வியூகமே முக்கியம். அரசியல் பற்றிய அறிவிப்பை 31 ஆம் தேதி அறிவிக்கிறேன்,” என்றார் ரஜினிகாந்த்.

Read Previous

‘மதுர வீரன்’, மண் வாசம் வீசும் பாடல்கள்

Read Next

‘சங்கு சக்கரம்’ – அம்மாவிடம் சத்தியம் வாங்கிய மகன்