தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்

நாட்டில் திறமையற்றவர்களுக்கு சரியான விதத்தில் வேலை கிடைப்பதில்லை, லஞ்சம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கிறது என்பதை மையமாகக் கொண்ட திரைப்படம்.

அதை நகைச்சுவையுடனும், பரபரப்புடனும் 1980களில் நடக்கும் கதையாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

சிபிஐ ஆபீசில் கிளார்க்காக வேலை பார்க்கும் தம்பி ராமையாவின் மகனான சூர்யாவுக்கு சிபிஐ-யில்  அதிகாரியாக ஆக வேண்டும் என ஆசை. ஆனால், அங்கு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குப் போகும் போது பெரிய அதிகாரியான சுரேஷ் மேனனால் அவமானப்படுத்தப்படுகிறார். வேலை கிடைக்காத விரக்தியில் சூர்யா சில கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு அவர்களை சிபிஐ அதிகாரிகள் எனச் சொல்லிக் கொண்டு பல இடங்களில் ரெய்டு போகிறார். அது பற்றிய விவரம் சிபிஐ-க்குத் தெரிய வருகிறது. சூர்யா கூட்டத்தைக் கண்டுபிடிக்க கார்த்திக் நியமிக்கப்படுகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சூர்யாவை இப்படி ஜாலியான ஒரு கதாபாத்திரத்தில் பார்த்து எத்தனை படங்களாகிறது. சூர்யா காதலிக்கிறார் என்றாலே அவ்வளவு இனிமையாக சுவாரசியமாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் அது இருக்கிறது. அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்வதிலும், தப்பு செய்தவர்களை தட்டிக் கேட்பதிலும், போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் திட்டம் தீட்டுவதிலும் என சூர்யாவுக்கு நடிப்பு தானாகவே வருகிறது.

சூர்யாவின் காதலியாக கீர்த்தி சுரேஷ். அதிகமான வேலை இல்லை என்றாலும் அதிகமான மேக்கப்புடன் கொஞ்சிப் பேசி ரசிக்க வைக்கிறார். கீர்த்தியை விட ரம்யா கிருஷ்ணன்தான் சூர்யாவுடன் அதிகக் காட்சிகளில் வருகிறார். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் ரம்யாவைத் தவிர வேறு யாரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்.

சூர்யாவின் கூட்டத்தைக் கண்டுபிடிக்கும் காவல் துறை அதிகாரியாக கார்த்திக், கடுமையாக நடந்து கொள்கிறார். சிபிஐ ஆபீசராக உத்தமன் என்ற பெயரில் கெட்டவனாக சுரேஷ் மேனன். பணக்கார வில்லன் கதாபாத்திரங்களுக்கு ஒருவர் கிடைத்துவிட்டார்.

செந்தில், சத்யன், சிவசங்கர் மாஸ்டர், தம்பி ராமையா, கலையரசன், யோகி பாபு, பிரம்மானந்தம் சில காட்சிகளில் வந்து போகிறார்கள். அந்தக் கால நாயகன் சுதாகர் அடையாளம் கண்டுபிடிப்பதற்குள் காணாமல் போய்விடுகிறார்.

கடமை தவறாத இன்ஸ்பெக்டராக நந்தா, கடைசியில் ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கிறார். அம்மாஞ்சியாக ஆர்.ஜே. பாலாஜி பொருத்தமாக நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே வந்து காமெடியில் அசத்திவிடுகிறார் ஆனந்தராஜ்.

அனிருத் இசையமைப்பில் ‘சொடக்கு மேல…’ பாடலுக்கு தியேட்டரே குதூகலிக்கிறது. மற்ற பாடல்களிலும் அனிருத் ஹிட் அடித்துவிட்டார்.

அடுத்தடுத்து காட்சிகள் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்திப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சூர்யா மட்டுமே ஒரு பிளாஷ் பேக் சொல்கிறார். மற்றவர்கள் ஏன் அவர் கூட்டத்தில் வந்து சேர்ந்தார்கள் என்பதற்கு குட்டியாக பிளாஷ் பேக் வைத்திருந்தால் படத்தில் இன்னும் ஈடுபாடு அதிகம் கிடைத்திருக்கும்.

இருந்தாலும், தியேட்டருக்கு போய் ரசித்துவிட்டு வரலாம்.

Read Previous

ஸ்கெட்ச் – விமர்சனம்

Read Next

சமுத்திரக்கனி நடிக்கும் ‘வெள்ளை யானை’