ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் இயக்கம் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் ஜுன் 11ம் தேதி வெளியாகிறது.
தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாகவும், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டும் இப்படம் வெளியாக உள்ளது.
தமிழ்ப் படத்தின் டிரைலரை ஸ்ருதிஹாசன், ஹிந்திப் பட டிரைலரை ஆமீர்கான், தெலுங்குப் பட டிரைலரை ஜுனியர் என்டிஆர் ஆகியோர் ஜுன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு இணையம் வழியே வெளியிட உள்ளார்கள்.
இந்த இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த சேகர் கபூர், வகிதா ரகுமான், ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா, ஜெய்தீப் அலாவத், நாசர், ஆனந்த் மகாதேவன், யுசுப் ஹுசைன், ராஜேந்திர குப்தா என அனைத்து நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து, கமல்ஹாசன் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக வி ரவிச்சந்திரன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.
‘விஸ்வரூபம்’ படம் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் 2013ம் ஆண்டு வெளியானது. 5 வருடங்களுக்குப் பிறகு இப்போது இரண்டாம் பாகம் வெளிவர உள்ளது.
விஸ்வரூபம் 2 டிரைலர் வெளியாவதைப் பற்றி கமல்ஹாசன் கூறுகையில்,
“விஸ்வரூபம் 2 டிரைலரை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வளவு காலமாக பொறுமையாக இருந்ததற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்த ஒவ்வொருவருக்கும் இந்தப் படம் மிகவும் நெருக்கமானது. நாங்கள் அன்புடனும், ஆர்வத்துடனும் உழைத்த இந்தப் படம் உங்களைக் கவரும் என்று எதிர்பார்க்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.