தமிழ்த் திரையுலகத்திலும், பின்னர் இந்திய, தமிழ்நாட்டு அரசியலிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் ஜெயலலிதா.
ஆறு முறை தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி வகித்தவர். ஆணாதிக்கம் மிகுந்த இந்திய அரசியலில் ஒரு பெண்ணாக இருந்தாலும் தன்னுடைய துணிச்சலால் பரபரப்பாகவும் பேசப்பட்டவர். அரசியலில் அவருடைய சாதனைகள் நிறையவே உண்டு.
தெலுங்கில் என்டிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘என்டிஆர்’, ஹிந்தியில் கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘83’ ஆகிய படங்களை தயாரித்து வரும் வைப்ரி மீடியா நிறுவனம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்க உள்ளது.
இந்தப் படத்தை ‘கிரீடம், மதராசப்பட்டிணம், தெய்வத் திருமகள், தேவி, வனமகன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய தமிழ்த் திரைப்பட இயக்குனர் விஜய் இயக்குகிறார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியன்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட உள்ளார்கள்.
தென்னிந்தியத் திரையுலகத்தின் பிரபலமான நட்சத்திரங்கள், ஹிந்தித் திரையுலகத்தின் பிரபலமான நட்சத்திரங்கள் இப்படத்தில் பங்கேற்க உள்ளார்கள்.
ஜெயலலிதா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
‘என்டிஆர், 83, ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு’ ஆகிய மூன்று படங்களையுமே 2019ம் ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.