கனா, நண்பர்களுக்கு நான் செய்யும் கடமை – சிவகார்த்திகேயன்

எஸ்கே புரொடக்சன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கனா.

இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் டி இமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பேசுகையில்,

“அருண்ராஜா பாடல் எழுதி ஒவ்வொரு பாடலும் பெரிய ஹிட் ஆகும்போது, நான் அருண்ராஜாவை இப்படியே செட்டில் ஆகிடாத என்று திட்டுவேன். அவன் இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான் என் கனவும். நம்ம ஊர் பசங்க விளையாடும் தெரு கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதை எழுதச் சொன்னேன், அவன் இண்டர்நேஷனல், அதுவும் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதையை எழுதி வந்தான்.

நம்ம ஊர்ல நடிக்க ஹீரோயின எங்கடா தேடுறது என்று நான் சொன்னேன். நானே இந்த படத்தைத் தயாரிக்கப் போகிறேன் என்று சொன்னேன். இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் படம் என்ற பெருமையோடு வெளியாகும் படம், வெளிநாட்டில் யாராவது பார்த்தால் சிரிச்சிடக் கூடாது என்ற பயம் இருந்தது.

மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன் படங்களில் நடித்து வந்தாலும் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், நான் முயற்சி பண்றேன், ஒரு வாய்ப்பு கொடுங்கனு சொன்னார். நிறைய அடி, காயங்கள் பட்டு நடித்திருக்கிறார்.

விவசாயத்தைப் பற்றிப் பேசும் ஒரு கதாபாத்திரம், எங்கள் முதல் தேர்வே சத்யராஜ் சார் தான். அவர் ஒப்புக் கொண்டு உள்ளே வந்த பின்பு படம் இன்னும் பெரிதாகியது. என் நண்பன் அருண்ராஜா, படத்தின் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் மீதான நம்பிக்கையால் இந்த படத்துக்கு என்ன தேவையோ அந்த செலவைச் செய்தோம்.

இந்தப் படத்தில் லாபம் வந்தால் ஒரு நல்ல விஷயத்துக்கோ அல்லது இன்னொரு படத்துக்கோதான் செலவு செய்வேன். படம் தயாரிக்கப் போறேன்னு சொன்னவுடன் முதலில் அனிருத்திடம் சொன்னேன், அவர் நிச்சயம் ஹிட் ஆகும் என்றார்.

என் மகள் ஆராதனாவை பாட வைத்த இசையமைப்பாளர் திபுவுக்கு நன்றி. சம்பாதிக்கிற பணத்துக்கு சொத்து வாங்கி சேர்க்காம, அருண்ராஜா அண்ணன் படத்தை தயாரிக்கலாம்னு சொன்ன மனைவி ஆர்த்திக்கு நன்றி.

இது நண்பர்களுக்கு நான் செய்யும் உதவி அல்ல, கடமை. கனா படத்தைத் தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரியோ ஹீரோவாக நடிக்க, ப்ளாக் ஷீப் குழுவினர் பங்கு பெறும் ஒரு படத்தைத் தயாரிக்கிறேன்,” என்றார் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்.

விழாவில் கனா இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், இசையமைப்பாளர்கள் அனிருத், இமான், தயாரிப்பாளர் ஆர்டி ராஜா, இயக்குனர்கள் பாண்டிராஜ், மித்ரன், விக்னேஷ் சிவன், பாக்யராஜ் கண்ணன், ரவிக்குமார், ராஜேஷ், பொன்ராம், துரை செந்தில்குமார், விஜய், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், எடிட்டர் ரூபன், பாடகர் சித் ஸ்ரீராம், நடிகர் இளவரசு, டான்சர் சதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

Read Previous

இரண்டு வருட உழைப்பில் வெளிவரும் இமைக்கா நொடிகள்

Read Next

உண்மையான சூப்பர் ஸ்டார்கள் யார் ? – விவேக்