24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், லால் மற்றும் பலர் நடிக்கும் படம் சீமராஜா.
வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் செப்டம்பர் 13ம் தேதி இப்படம் வெளியாகிறது.
இப்படத்தின் கலை இயக்குனராக முத்துராஜ் அவருடைய பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
‘சீமராஜா’ படம் பற்றிய அனுபவத்தை அவர் நம்மிடம் பகிர்ந்த போது,
“சீமராஜா’வில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்குக் காரணம் பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவு தான். அவர் என் கலை வேலையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களையும் ரசித்தார். அவர் படப்பிடிப்புக்கு முன்பே வாட்ஸாப்பில் என் பரிந்துரையையும் கேட்பார். இசையமைப்பாளர் டி இமான், திருவிழா சூழலை தன் இசையால் உருவாக்கியிருக்கிறார்.
பொதுவாக, ஒரு கிராமத்து படம் பண்ணும் போது அதன் தயாரிப்பாளருக்கு எங்கள் ஆர்ட் டிபார்ட்மெண்ட் மீது சில கட்டுப்பாடுகள் இருக்கும். பெரும்பாலும் எங்கள் வேலை கோயில் திருவிழா அல்லது மார்க்கெட் உருவாக்குவதோடு நின்று விடும். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா என் கற்பனைத் திறனை வெளிப்படுத்த எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
சில நேரங்களில், நான் செலவை மனதில் வைத்து சமரசம் செய்து கொண்டாலும், படம் நன்றாக வருவதற்கு என்னை ஊக்குவிப்பார். மேலும், கிராமப்புற வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக வழங்கும் பொன்ராம் சாரின் நோக்கம் என்னை இன்னும் பரிசோதனை செய்யத் தூண்டியது. இயல்பாகவே ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு சீமராஜாவில் எனக்குக் கிடைத்தது,” என்கிறார்.