சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சர்கார்’.
இப்படத்தின் சிங்கிள் பாடலான ‘சிமிட்டாங்காரன்…’ நேற்று மாலை வெளியானது. பாடல் முழுவதுமே சென்னை தமிழ் வார்த்தைகள் இருந்ததால் இந்தப் பாடல் பலருக்கும் புரியவில்லை.
ஏதோ, ஒரு சில வார்த்தைகள் மட்டுமே புரிந்தன. முழு பாடலுக்கும் பாடலை எழுதிய விவேக் அர்த்தம் சொன்னால்தான் பாடல் புரியும் என்ற நிலைமை உள்ளது.
இப்படி ஒரு பாடலை ரகுமான் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் எதிர்பார்க்காத நிலையில் பாடலைப் பற்றி நேற்று மாலை முதலே கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
‘ஆளப் போறான் தமிழன்’ போன்ற பாடலை எதிர்பார்த்த விஜய் ரசிகர்கள் இந்த ‘சிமிட்டாங்காரன்’ வித்தியாசமாக உள்ளது என்றும், ரகுமான் ரசிகர்கள் ரகுமான் பாடல் கேட்க, கேட்கத்தான் இனிக்கும் என்றும் சமாளித்தார்கள்.
இருப்பினும் யு டியூபில் பாடலுக்கான வரவேற்பு அதிகமாகவே உள்ளது. வெளியான 24 மணி நேரத்தில் 52 லட்சம் பார்வைகளையும், 4 லட்சத்து 81 ஆயிரம் லைக்குகளையும், 39 ஆயிரம் கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது.