இயக்குனர் ஷக்தி சிதம்பரம் சில பல வருடங்களுக்கு முன்பு சில நகைச்சுவைப் படங்களைக் கொடுத்து ரசிக்க வைத்தவர். சத்யராஜுக்கு ‘என்னம்மா கண்ணு’ என்ற படத்தின் மூலம் மீண்டும் நாயகனாக அவர் வர ஒரு ரீ-என்ட்ரி கொடுத்தவர்.
17 ஆண்டுகளுக்குப் பின் இந்த ‘சார்லி சாப்ளின் 2’ இரண்டாம் பாகத்தைக் கொடுத்திருக்கிறார். முதல் பாகத்துடன் ஒப்பிடும் போது இரண்டாம் பாகத்தில் நகைச்சுவை கொஞ்சம் குறைவுதான் என்றாலும், இடைவேளைக்குப் பின் அதை முடிந்தவரை ஈடு செய்திருக்கிறார்.
நண்பனின் பேச்சைக் கேட்டு, திருமணம் செய்து கொள்ள உள்ள காதலி நிக்கி கல்ரானியைத் திட்டி ஒரு வீடியோ அனுப்பி விடுகிறார் பிரபுதேவா. அந்த வீடியோவைப் பார்த்து விட்டால் எங்கே திருமணம் நின்று விடுமோ என பயந்து, அந்த வீடியோவை நிக்கி பார்ப்பதற்கு முன்பாக அழித்துவிட முயற்சிக்கிறார் பிரபுதேவா. அதை அவர் செய்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
இந்தக் காலத்தில் அதிகம் பயன்பாட்டில் உள்ள வாட்சப், வீடியோ பதிவு என அப்டேட்டடான ஒரு கருவை எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர். பிரபுதேவாவிற்குக் காமெடி கைவந்த கலை. இந்தப் படத்திலும் அப்பாவித்தனமான முகத்துடன் காமெடியை ரசித்து செய்திருக்கிறார்.
நிக்கி கல்ரானியிடம் காமெடிப் படம், காமெடி கதாபாத்திரம் என சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. படம் முழுவதும் சிரித்துக் கொண்டேயிருக்கிறார்.
படத்தின் இரண்டாவது நாயகியாக அடா சர்மா. தன் திருமணத்தை நிறுத்திய பிரபுதேவாவைப் பழி வாங்கத் துடிக்கும் கதாபாத்திரம். தமிழ்நாட்டுப் பெண், தமிழ் பேசுவாரா என்று தெரியவில்லை. இருப்பினும் நடிப்பிலும் நடனத்திலும் பாஸ்மார்க் வாங்கி விடுகிறார்.
பிரபு வழக்கம் போல, குணச்சித்திரத்திலும், நகைச்சுவையிலும் கனகச்சிதம். பிரபுதேவாவின் நண்பர்களில் சந்தனா கவனிக்க வைக்கிறார். விவேக் பிரசன்னா, அரவிந்த் ஆகாஷ் இருவரில் விவேக் பிரசன்னாவுக்கு வசனங்களாவது இருக்கிறது.
அம்ரிஷ் இசையில் ஏற்கெனவே சூப்பர்ஹிட்டான ‘சின்ன மச்சான்’ பாடலில், பிரபுதேவாவும், நிக்கியும் நடனத்தில் அசத்தியிருக்கிறார்கள்.
கதை, லாஜிக் எனப் பார்க்காமல் டைம் பாஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான படம் இது.