2 கோடி செலவில் ‘கென்னடி கிளப்’ கிளைமாக்ஸ்

நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சசிகுமார், பாரதிராஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கென்னடி கிளப்’.

பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படம் சசிகுமார் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக உருவாகி வருகிறது.

15 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

தற்போது விழுப்புரத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இறுதிக் கட்டப் படப்பிடிப்பிற்காக ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர் ஆகிய இடங்களில் இருந்து 16 கபடிக் குழுக்கள் வந்துள்ளன.

நிஜ வீரர்களைக் கொண்டே படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். ஏறக்குறைய 300 வீரர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.

படப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் வட இந்தியாவில் நடப்பது போல் படப்பிடிப்பு தளம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் 2 கோடி செலவு செய்துள்ளனர்.

இறுதிக்கட்ட காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ போட்டியாகவே நடத்தி படப்பிடிப்பை பதிவு செய்து வருகிறார்கள் படக் குழுவினர்.

இறுதிப்போட்டியை காண ஏராளமானோரை வரவழைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட காட்சிகளுக்கு மட்டும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் பாடல்கள் மட்டும் படமாக்கப்படுகிறது என்று இதன் தயாரிப்பாளர் தாய் சரவணன் தெரிவித்தார்.

Read Previous

Sindhubaadh – Official Teaser

Read Next

தேவி 2, ஏப்ரல் 12 வெளியீடு