காப்பான் – விமர்சனம்

கதை

நாட்டின் பிரதமர் மோகன்லாலின் பாதுகாப்புப் பிரிவுக்கு பணி அமர்த்தப்படுகிறார் சூர்யா. மோகன்லாலுக்கு தீவிரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் வருகிறது. அப்படி சில முறை நடந்த தாக்குதல்களில் மோகன்லாலைக் காப்பாற்றும் சூர்யா, காஷ்மீரில் நடக்கும் தாக்குதலில் மோகன்லாலைக் காப்பாற்றத் தவற, மோகன்லால் கொல்லப்படுகிறார். அதன்பின் அவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார். மோகன்லாலின் மகன் ஆர்யா பிரதமராகப் பதவியேற்க மீண்டும் அதே பதவிக்கு அழைக்கப்படுகிறார் சூர்யா.  பிரதமர் ஆர்யாவைக் கொல்லவும் மிரட்டல்கள் வருகின்றன. அவற்றை சூர்யா எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

பாதுகாப்பு அதிகாரியாக கம்பீரம், மிரட்டல் என சிறப்பாக நடித்திருக்கிறார் சூர்யா. சிங்கம் போலீஸ் ஆக அதிரடி காட்டியவர், இந்தப் படத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் எப்படி இருப்பார்கள் என்பதையும் கண்முன் நிறுத்துகிறார். மோகன்லால் இடைவேளை வரை வந்தாலும் பிரதமராகவே மாறியிருக்கிறார். பிரதமராக பதவியேற்ற பின்னும் ஒரு இளைஞராகவே ஆர்யா நடந்து கொள்வது சினிமாத்தனமாக உள்ளது. ஆனாலும், பொம்மன் இரானியிடம் சவால் விட்டு பேசும் போது அசத்துகிறார். சாயிஷாவிற்கு அதிக வேலையில்லை. அவருக்கும் கூடுதலாக சில காதல் காட்சிகளைக் கொடுத்திருக்கலாம். பொம்மன் இரானி நாட்டின் பெரும் கார்ப்பரேட் முதலாளியாக அரசையே மிரட்டுகிறார். கோட் சூட் போட்ட சமுத்திரக்கனியும் அவருடைய பாத்திரத்தில் பொருத்தம்.

இசை, மற்றவை

ஹாரிஸ் ஜெயராஜ்தான் கொஞ்சம் ஏமாற்றிவிட்டார். ஒன்றிரண்டு பாடல்களையாவது ஹிட்டாக்குவார். இந்தப் படத்தில் அதுவும் இல்லை. ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஆக்ஷன் காட்சிகளில் பரபரப்பூட்டுகிறார். ஆண்டனியின் படத் தொகுப்பில் காட்சிகளை இன்னும் கொஞ்சம் நறுக்கி, படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

+

சூர்யாவின் நடிப்பு, விவசாயிகள் பிரச்சினை, கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதிக்கம் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டியது

–

சினிமாத்தனமான நம்ப முடியாத லாஜிக் மீறலான சில காட்சிகள், படத்தின் நீளம்

குறிப்பு – தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகளான காவிரி டெல்டா, ஸ்டெர்லைட் விவகாரம் ஆகியவற்றில் கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி தங்கள் ஆதிக்கத்தை படிப்படியாக செலுத்துகிறார்கள் என்பதை துணிச்சலாகக் காட்டியிருக்கிறார்கள். அது பற்றி அறிந்து கொள்ளாத பலருக்கும் இப்படம் புரிந்து கொள்ள உதவும்.

Read Previous

சூப்பர் டூப்பர் – விமர்சனம்

Read Next

ரசிகர்களை நம்பி வெளியிடுகிறோம் – கயல் சந்திரமௌலி