தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் கதைத் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
கதைகளைப் பறி கொடுத்தவர்கள் அவை தங்களது கதைதான் என்று சொன்ன பிறகு, அவர்களிடம் ஏதோ ஒரு விதத்தில் சமரசம் பேசி, பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு, படத்தின் டைட்டிலில் நன்றி என்ற ஒற்றை வார்த்தையுடன் அந்த விவகாரத்தை முடித்துக் கொள்கிறார்கள்.
பெரிய நடிகர்களின் படங்களுக்கும் கூட இப்படியான கதைத் திருட்டு விவகாரம் வருவது ஆச்சரியமாக உள்ளது.
அந்த வரிசையில் தற்போது சசிகுமார் நடிப்பில் பொன்ராம் இயக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் கதைத் திருட்டு விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பத்திரிகையாளரான தேனி கண்ணன் பிரபல இதழில் ‘இதய வீணை’ என்ற பெயரில் எழுதிய சிறுகதைதான் ‘எம்ஜிஆர் மகன்’ படமாக உருவாகி வருவதாக தேனி கண்ணன் சந்தேகப்படுகிறார்.
பொன்ராமின் கதை விவாதத்தில் இருந்த ஒரு நபரிடம் இந்தக் கதையைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதனால் இரண்டு கதைகளும் ஒரே கதையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளார் தேனி கண்ணன்.
பட வெளியீடு சமயத்தில் இது குறித்து பிரச்சினை செய்யாமல் இருக்க படம் பற்றிய அறிவிப்பு வந்த போதே செப்டம்பர் மாதத்திலேயே இது குறித்து தன்னுடைய முகப் புத்தகத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார் தேனி கண்ணன்.
‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து பிரமோஷன் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். சில தினங்களுக்கு முன்பு படத்தின் முதல் பார்வையையும் வெளியிட்டனர்.
இந்த சூழ்நிலையில், ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் கதை பற்றிய சர்ச்சைக்கு படக்குழு என்ன தெரிவிக்கப் போகிறது என்பதுதான் தேனி கண்ணனின் கேள்வியாக உள்ளது.
‘எம்ஜிஆர் மகன்’ படத்தை 2020 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
தேனி கண்ணன் முகப்புத்தகப் பதிவு
https://www.facebook.com/theni.kannan/posts/2721569387867232