‘டெலிவரி பாய்’ திரைப்படத்தை நானி எழுதி இயக்க, கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்க, லியோ சிவகுமார், ராதிகா சரத்குமார், பிரிகிடா சகா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர், உதயதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கோவையில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வரும் சிவா (லியோ சிவகுமார்), காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். தனது தாய் லட்சுமி (ராதிகா சரத்குமார்) மீது மிகுந்த பாசம் கொண்டவர். இந்நிலையில், திடீரென அவரது தாயின் உடல்நிலை பாதிக்கப்படுவதால் அறுவை சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுகிறது. வேறு வழியில்லாத சூழலில் கவுதம் (துஷ்யந்த் ஜெயபிரகாஷ்) என்பவரிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாயைத் திருடுகிறார் சிவா. அந்தப் பணத்தின் மூலம் தனது தாய்க்குச் சிகிச்சை அளித்து காப்பாற்றுகிறார்.
தாய் குணமடைந்த பிறகு, தான் திருடிய பணத்தை உரியவரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்கிறார். ஆனால், அந்தப் பணத்தைப் பறிகொடுத்த கவுதம் எதிர்பாராத விதமாக ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார். அவருக்கு உதவுவதற்காகச் செல்லும் சிவா, கொலை செய்வதையே தொழிலாகக் கொண்ட பாட்டில் கேங் என்ற கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார். அந்தக் கும்பலிடமிருந்து கவுதமை சிவா காப்பாற்றினாரா? காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை.
சிவா கதாபாத்திரத்தில் நடித்துள்ள லியோ சிவகுமார், தாயின் மீது பாசம் கொண்ட மகனாகவும், காதலனாகவும், எதிரிகளை எதிர்கொள்ளும் இளைஞராகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, இரண்டாம் பாதியில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் ஆக்ஷன் நாயகனாகத் தன்னை வெளிப்படுத்த முயற்சித்துள்ளார். கவுதம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ஆபத்தான சூழலில் சிக்கிக்கொள்ளும் சாதாரண மனிதனின் பயத்தையும் பதற்றத்தையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். லட்சுமியாக நடித்துள்ள ராதிகா சரத்குமார் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். பிரிகிடா சகா தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கொஞ்ச நேரமே வந்து போகிறார், அதன் பின்பு படத்தில் காணாமல் போகிறார். போஸ் வெங்கட், காளி வெங்கட், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோரும் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர். பணத்திற்காகக் கொலை செய்யும் அந்த ‘பாட்டில் கேங்’ பதற வைக்கிறார்கள்.
கே.எஸ். சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை அதிரடி காட்சிகளுக்கு வலுசேர்க்கிறது. குறிப்பாக, பாட்டில் கேங் தொடர்பான காட்சிகளில் இசை கூடுதல் வேகத்தைக் கொடுக்கிறது. பிரசன்னா எஸ். குமார் மற்றும் அசோக் குமார் ராஜின் ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஆர். வசந்தகுமாரின் படத்தொகுப்பில் முதல் பாதியில் சில காட்சிகளைச் சுருக்கியிருக்கலாம். பீனிக்ஸ் பிரபுவின் சண்டைப் பயிற்சியில் அமைந்துள்ள மோதல் காட்சிகள் படத்தின் முக்கியமான அம்சமாக உள்ளன.
தாயின் மீதான பாசத்தால் ஒரு இளைஞன் எடுக்கும் தவறான முடிவு, அதனால் மற்றொருவரின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு, பின்னர் அந்தத் தவறைச் சரிசெய்ய அவர் மேற்கொள்ளும் முயற்சி ஆகியவற்றை மையமாக வைத்து திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் நானி தர்லா. பணத்தைத் திருடியதற்கான குற்றவுணர்வும், அதைப் பறிகொடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் கதையின் அடிப்படையாக அமைந்துள்ளன. குறிப்பாக, ஒரு மனிதனின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு உதவ வேண்டும் என்ற தாயின் அறிவுரையை சிவா தனது வாழ்க்கையில் பின்பற்றும் விதம் கதைக்கு முக்கியத்துவம் சேர்க்கிறது.
முதல் பாதியில் குடும்பப் பாசம், காதல், காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற சிவாவின் கனவு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கதையின் மையப்புள்ளியை அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இரண்டாம் பாதியில் பாட்டில் கேங் அறிமுகமான பிறகு கதை அதிரடி தளத்துக்கு மாறுகிறது. கிளைமாக்ஸில் சிவா திடீரென வலிமையான சண்டை வீரராக மாறுவது கதையின் இயல்புத்தன்மையைப் பாதிக்கிறது.
தாய்ப்பாசம், மனிதநேயம், நன்றியுணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதைக்கு வலுவான திரைக்கதை அமைந்திருந்தால் ‘டெலிவரி பாய்’ இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.