தாத்தாவின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, தனியாக டெல்லிக்குப் பயணிக்கும் சிறுவனின் கதையை தேசப்பற்றுடனும் இந்தியாவின் பன்முகத்தன்மையுடனும் இணைத்துச் சொல்லியிருக்கும் திரைப்படம் ‘Flag’.
சிறுவயதிலேயே பெற்றோரை இழக்கும் தீஹான், தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான். பேரன் மீது மிகுந்த பாசம் கொண்டிருக்கும் தாத்தாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. அப்போது, டெல்லியில் குடியரசுத் தலைவர் ஏற்றும் தேசியக்கொடியை நேரில் பார்க்க வேண்டும் என்பதுதான் தனது வாழ்நாள் ஆசை என்று தாத்தா கூறுகிறார். அவரது ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்யும் தீஹான், யாருடைய துணையும் இல்லாமல் டெல்லிக்குப் பயணமாகிறான்.
அந்தச் சிறுவனால் டெல்லியைச் சென்றடைய முடிந்ததா, பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் அனுபவங்கள் என்ன, தாத்தாவின் ஆசை நிறைவேறியதா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஒரு சிறிய கிராமத்தில் தொடங்கும் கதை, சிறுவனின் பயணத்தின் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு நம்மையும் அழைத்துச் செல்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் எனப் பல மாநிலங்களின் இயற்கை அழகு, கலாசாரம் மற்றும் அடையாளங்களை அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் முக்கிய பலம்.
தாஜ்மஹால், திருவள்ளுவர் சிலை, சர்தார் வல்லபாய் படேல் சிலை உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் திரையில் இடம்பெறுவது சிறப்பு. குறிப்பாக, இந்திய தேசியக்கொடி தயாரிக்கப்படும் கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகேயுள்ள பெங்கேரி காதி உற்பத்தி மையம் குறித்த தகவல்களையும் படத்தில் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது.
தேசியக்கொடியின் பெருமையை மட்டும் பேசாமல், அதன் பின்னணியில் இருக்கும் உழைப்பு, வரலாறு மற்றும் முக்கியத்துவத்தையும் ஒரு சிறுவனின் பயணத்தின் வழியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி. பொன் சங்கர்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் தீஹான், தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதி, பயணத்தில் ஏற்படும் பயம், ஆர்வம், வெகுளித்தனம் எனச் சிறுவனுக்கான உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மிக்கி மக்கி ஜா, அபினவ் கோசாமி, அனந்த், பப்புஷா உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த நடிகர்களின் பங்களிப்பும் கதையின் பயணத்திற்குப் பொருத்தமாக அமைந்துள்ளது.
வழக்கமான தேசப்பற்றுத் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு சிறுவனின் பார்வையில் இந்தியாவின் பெருமையைச் சொல்ல முயற்சித்திருப்பது இயக்குநரின் தனித்துவமான அணுகுமுறை. தனியாகப் பயணம் செய்யும் சிறுவனை மையமாகக் கொண்ட கதை என்பதால், ஆரம்பத்தில் கடத்தல் உள்ளிட்ட வழக்கமான சம்பவங்களை நோக்கித் திரைக்கதை செல்லுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால், அதைத் தவிர்த்து பல்வேறு மாநிலங்களையும் அங்குள்ள மனிதர்களையும் அறிமுகப்படுத்தும் பயணமாகக் கதையை நகர்த்தியிருப்பது சுவாரசியம்.
இயக்குநராக மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கும் எஸ்.பி. பொன் சங்கர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் இயற்கை அழகையும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார். சில காட்சிகள் பார்வையாளர்களுக்கு ஒரு சுற்றுலா அனுபவத்தையே தருகின்றன. ராஜா ரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியத்தின் இசை, கதையின் உணர்வுகளுக்கும் தேசப்பற்று சார்ந்த காட்சிகளுக்கும் பக்கபலமாக அமைந்துள்ளது.
அதேநேரம், பயணத்தையும் சுற்றுலாத் தலங்களையும் விரிவாகக் காட்சிப்படுத்துவதில் காட்டிய கவனத்தை, சிறுவன் எதிர்கொள்ளும் சவால்களிலும் திரைக்கதையின் விறுவிறுப்பிலும் செலுத்தியிருக்கலாம். சில இடங்களில் பிரதான கதையிலிருந்து கவனம் விலகுவதும், பயணத்தின் சவால்கள் இன்னும் அழுத்தமாகச் சொல்லப்படாததும் படத்தின் பலவீனம்.
மொத்தத்தில், தேசப்பற்று என்றாலே போர், ராணுவம், எல்லைப் பாதுகாப்பு என்று வழக்கமான பாதையில் பயணிக்காமல், தேசியக்கொடியின் பெருமையையும் இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒரு சிறுவனின் பயணத்தின் மூலம் எடுத்துச் சொல்லியிருக்கும் திரைப்படம் ‘ஃப்ளாக்’. குறிப்பாக, இந்தியாவின் மாநிலங்கள், கலாசாரம், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் தேசியக்கொடி குறித்த தகவல்களை அறிந்துகொள்ள விரும்பும் பள்ளி மாணவர்களுக்குப் பயனுள்ள திரைப்படமாக அமைந்துள்ளது.