விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் மூலம் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வு மற்றும் மர்மம் என பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து வெளியாகியுள்ள ‘பத்தா’ டிரைலர், கதையின் முக்கிய முடிச்சுகளை வெளிப்படுத்தாமல் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றங்கள் மற்றும் பல்வேறு கதாபாத்திரப் பரிமாணங்கள், 80-களின் பின்னணி, நகைச்சுவை நிறைந்த காட்சிகள், குடும்ப உணர்வுகள் என பல சுவாரஸ்ய அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள ‘பத்தா’ திரைப்படம், திரையில் என்ன அனுபவத்தை வழங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை டிரைலர் ஏற்படுத்தியுள்ளது.
‘பத்தா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன், ‘ஜெய் பீம்’ புகழ் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பை கவனித்துள்ளார். அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.