ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில், ரியோ மற்றும் அறிமுக நடிகை வர்டிகா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம், திருமண வயதைத் தாண்டிய இளைஞனின் காதல் போராட்டத்தையும், எதிர்பாராத திருப்பங்களையும் நகைச்சுவையுடன் கலந்து சொல்கிறது. பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் அதே வேளையில், ஆச்சரியமூட்டும் கதைக்கருவைக் கொண்ட இந்தப் படம், எளிய மனநிலையில் பார்க்க ஏற்ற பொழுதுபோக்குப் படைப்பாகத் திகழ்கிறது.
திருமண வயதைக் கடந்தும் பெண் கிடைக்காமல் திண்டாடும் ரியோவின் வாழ்க்கையில், வர்டிகா என்ற அழகியின் காதல் புகுகிறது. ஆனால் அவள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் என்ற கடுமையான நிபந்தனையை விதிக்கிறாள். அழகிலும் காதலிலும் மயங்கிய ரியோ அதை ஏற்றுக்கொண்டு காதலிக்கத் தொடங்குகிறான். சில நாட்களில் அந்த 6 மணி கட்டுப்பாடு பல சிக்கல்களை உருவாக்க, ரகசியத்தை அறிந்துகொள்ள அவன் முடிவு செய்கிறான்.
ஹீரோவும் பார்வையாளர்களும் யோசிக்க, யூகிக்க முடியாத ஒரு ஆச்சரியமான பிரச்சனை நாயகிக்கு இருப்பது வெளிப்படுகிறது. அது என்ன? அறிந்த பிறகும் ரியோ வர்டிகாவை காதலித்தாரா? திருமணம் நடந்ததா? என்பதை நகைச்சுவையாகச் சொல்வதே ‘ராம் அன்ட் லீலா’.
கல்யாணத்துக்காக ஏங்கும் இளைஞன் ராம் கதாபாத்திரத்தில் ரியோ, காமெடி கலந்த நடிப்பால் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். பெண்கள் உலகம் தெரியாத அப்பாவியாக, ஒவ்வொரு அசைவிலும் பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார். பெரும்பாலான சில்மிஷங்களும் செயல்களும் சிவகார்த்திகேயனின் ஆரம்பக்கால நடிப்பை நினைவூட்டுகின்றன. காதலுக்காக ஏங்குவது, எதிர்பாராத பிரச்சனை, அதைத் தீர்க்க போராடுவது என கதைக்கு வலிமை சேர்க்கும் வகையில் அவரது நடிப்பு இருந்தாலும், சில இடங்களில் சற்று அதிகப்படியாகவும் தெரிகிறது.
அறிமுக நடிகை வர்டிகா அழகாகத் திகழ்கிறார். கனமான பாத்திரம் என்றாலும், ஹீரோவுக்கு இணையான வாய்ப்புகள் அவருக்கு வழங்கப்படவில்லை. அவரை வெறும் அழகு சிலையாகக் காட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.
நாயகனின் தந்தையாக சேத்தன், அம்மாவாக மாளவிகா அவினாஷ், தங்கையாக தாஃபியா அபு, மாமனாக முனீஷ்காந்த், நண்பனாக பாலாஜி தியாகராஜன் தயாளன், நாயகியின் அம்மாவாக தீபா வெங்கட், மற்றொரு மாமனாக மாகாபா, தாத்தாவாக காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் பாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமான தேர்வாக விளங்குகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுன் காட்சிகளை வண்ணமயமாகப் படமாக்கியிருக்கிறார். குறிப்பாக நாயகியை அழகாகவும் பளிச்சென்றும் காட்டுவதில் அதிக கவனம் செலுத்தி, படம் முழுவதையும் கண்ணைக் கவரும் வகையில் எடுத்திருக்கிறார்.
அன்கிட் மேனனின் இசையில் பாடல்கள் அனைத்தும் மாண்டேஜாக அமைந்திருந்தாலும், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையிலும், ரீல்ஸ் வீடியோக்களுக்கு ஏற்றதாகவும் இருக்கின்றன. பின்னணி இசை பாடல்களைப் போலவே மெலோடியான பாணியில் இனிமையாகப் பயணிக்கிறது.
படத்தொகுப்பாளர் ஒய்.என்.சி.சிவா முதல் பாதியை சற்று மெதுவாக நகர்த்தினாலும், இரண்டாம் பாதியை வேகமாக முன்னெடுத்து, நகைச்சுவை காட்சிகளை சரியான இடங்களில் தொகுத்து படத்தை கலகலப்பாக வைத்திருக்கிறார்.
எழுதி இயக்கிய ராமச்சந்திரன் கண்ணன், எந்த ஆங்கிலப் படத்திலிருந்து கருவை எடுத்தார் என்பது தெரியவில்லை. ஆனால் அந்தக் கருவை தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.
யூகங்களைத் தாண்டிய நாயகியின் பிரச்சனை படத்தை சுவாரஸ்யமாக முன்னெடுக்க உதவியதோடு, அதற்கான பின்னணியை கதையாக விவரித்த விதமும் திரைக்கதைக்கு வலிமை சேர்த்திருக்கிறது.
பிரச்சனை தெரிந்த பிறகு காதலர்கள் ஒன்று சேர்வதில் உள்ள சிக்கல், அதைத் தாண்டிய காதல் உணர்வு, திருமணத்தை காமெடி கலாட்டாவாகக் கையாண்ட விதம் ஆகியவற்றின் மூலம் படத்தில் உள்ள சில குறைகளை மறக்கடித்து, சிரித்து மகிழும்படியான ஒரு பொழுதுபோக்குப் படமாக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் வழங்கியிருக்கிறார்.