‘லாரா’ திரைப்படத்தைத் தொடர்ந்து, எம்.கே. ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது அடுத்த படைப்பாக ‘அறுவடை’ என்ற திரைப்படத்தை வழங்குகிறது.
எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், அவரே கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சிம்ரன் ராஜ் இணைந்துள்ளார், மேலும் முக்கிய வேடத்தில் பருத்திவீரன் சரவணன் அசத்துகிறார். இவர்களுடன் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஆனந்த், ஒளிப்பதிவாளர் ரகு ஸ்ரவண் குமார், படத்தொகுப்பாளர் கே.கே. விக்னேஷ் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவை வலுப்படுத்துகின்றனர். பாடல்களை கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி ஆகியோர் இயற்றியுள்ளனர்.
கிராமியப் பின்னணியில் உருவாகும் இந்த கமர்ஷியல் திரைப்படத்தை, நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரிக்கிறார். கிராமப்புற மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை உண்மையாக பிரதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
படக்குழு, கோயம்புத்தூரில் பொங்கல் விழாவை கொண்டாடி, படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அறுவடைத் திருநாளான பொங்கலில் இந்த விழாவை நடத்தி, படத்தின் பெயருக்கு ஏற்றவாறு ஒரு சிறப்பான முடிவை அளித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் எம். கார்த்திகேசன் கூறுகையில், “ஒரு சாதாரண குடும்பத்தில் ஏற்படும் சிறிய பிரச்சினை, எப்படி பெரிய சமூக சீரழிவாக மாறுகிறது என்பதை இப்படம் விவரிக்கிறது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற பழமொழியை மையமாகக் கொண்டு, ‘அறுவடை’ என்று பெயரிட்டுள்ளோம். விரைவில் படத்தை ரசிகர்களுக்கு வழங்க உள்ளோம்” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.
கிராமிய வாழ்வின் உணர்ச்சிகளைத் தொட்டு, சமூகச் செய்தியை சொல்லும் இந்த ‘அறுவடை’ திரைப்படம், விரைவில் திரையரங்குகளில் அறுவடை செய்யத் தயாராகிறது!