இயற்கை முறை குழந்தை பிறப்பு பற்றி சொல்லும் ‘பர்த்மார்க்’

சேபியன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி தயாரித்து இருக்கும் படம் ‘பர்த் மார்க் (Birthmark)’.

இயற்கையான முறையில் குழந்தை பிறப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் இது. விக்ரம் ஸ்ரீதரன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘டான்சிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் மருமகளாக நடித்த மிர்னா நடித்துள்ளார். மற்றும் பிஆர் வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இனியவன் பாண்டியன் படத்தொகுப்பு செய்ய, ராமு தங்கராஜ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். கூடுதல் திரைக்கதை பணியை அனுசுயா வாசுதேவன் கவனித்துள்ளார்.

இப்படம் பிப்ரவரி 23ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன், இணைந்து எழுதி, தயாரித்துள்ள ஸ்ரீராம் சிவராமன் படம் குறித்து பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள்.

‘நேஞ்சுரல் பர்த்’ (Natural Childbirth) என்று சொல்லக்கூடிய இயற்கை குழந்தை பிறப்பை களமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பர்த் மார்க்’. (Birth Mark)  இணைந்து இப்படத்தை எழுதியிருப்பதோடு,  தயாரித்தும் இருக்கிறார்கள். விக்ரம் ஸ்ரீதரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

 “எங்களுடைய முதல் படம் இது தான். புதிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம், அதற்காக பல கதைகளை எழுதினோம். அப்போது தான் நேஞ்சுரல் பர்த், அதாவது இயற்கையான முறையில் குழந்தை பிறப்பு பற்றி விக்ரம் ஒரு விஷயத்தைக் கூறினார். அது பற்றி நாங்கள் நிறைய படித்தோம். அப்போது நிறைய சுவாரசியமான விஷயங்கள் எங்களுக்குத் தெரிய வந்தது.

இந்தியாவின் சில மாநிலங்களில் நேஞ்சுரல் பர்த் முறை இருந்தாலும், அதை கமர்ஷியலாக அதிகம் பேர் செய்வதில்லை. சில மாநிலங்களில் மட்டும் அந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது பற்றி விரிவாகப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்ததால், எங்களுடைய முதல் படமாக இதைத் தேர்வு செய்தோம்.

நேஞ்சுரல் பர்த் என்பதால், அறுவை சிகிச்சை முறையிலான குழந்தை பிறப்புக்கு எதிராகவோ அல்லது இயற்கை குழந்தை பிறப்புக்கு ஆதரவாகவோ நாங்கள் பேசவில்லை. அதை ஒரு களமாக எடுத்துக் கொண்டு ஒரு தம்பதியின் மனப்போரட்டங்களையும், தனிமைப்படுத்துதலில் அவர்களுக்கு இடையே ஏற்படும் மாற்றங்கள், அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்,  எப்படி பாதிக்கப்படுகிறார்கள், இதை எல்லாம் தாண்டி நாயகியான மிர்னாவின் குழந்தை பிறப்பு எப்படி நடக்கிறது, படத்தில் இடம்பெறும் இடங்கள் உள்ளிட்ட படத்தின் முக்கிய அம்சங்களாக சுவாரசியமாகப் படமாக்கி இருக்கிறோம்.

திரில்லர் வகை என்று சொல்வதை விட, படம் பார்க்கும் ரசிகர்கள் படத்தின் முதல் காட்சி முதல், இறுதிக் காட்சி வரை த்ரில்லர் மனநிலையில் இருப்பார்கள், அந்த அளவுக்கு படத்தில் ஏதாவது ஒன்று நடந்து கொண்டு தான் இருக்கும். அது என்ன, என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை படம் பார்க்க வைக்கும்படி திரைக்கதை அமைத்திருக்கிறோம். படம் பார்க்கும் போது நிச்சயம் நீங்களும் அதை உணர்வீர்கள்.

ஷபீர் மற்றும் மிர்னா இருவரை சுற்றித்தான் கதை நகரும். இவர்களைத் தாண்டி நான்கு கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். ஆனால், ஷபீர் மற்றும் மிர்னா இவர்களுடைய கதாபாத்திரங்கள், அதில் அவர்கள் வெளிப்படுத்திய நடிப்பு, ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்க்கும்படி இருக்கும். மிர்னாவை ஆடிசன் மூலமாகத்தான் தேர்வு செய்தோம். கதாநாயகிக்காக பல நடிகைகளை ஆடிசன்  செய்தோம், ஆனால் ஜெனி வேடத்திற்கு பொருத்தமாக இல்லை. மிர்னா வந்தார், அவரை லுக் டெஸ்ட் செய்தோம். படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை விவரித்து நடிக்க வைத்தோம், அதில் அவர் நடித்த போது, இவரைத் தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. அதனால் தான் அவரைத் தேர்வு செய்தோம்.

அதேபோல் தான் ஷபீரும். எங்கள் கதாபாத்திரத்திற்கான சரியான நபராக இருப்பார் என்று அவரை அணுகினோம். அவரும் படத்தின் ஐடியா மற்றும் முழுக்கதையையும் கேட்டுவிட்டு ஓகே சொன்னது மட்டும் அல்ல, எங்கள் படத்திற்காக மற்ற படங்களை விட்டுவிட்டு எங்களுடன் பயணித்தார்.

படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை விவரித்த உடன் அந்த காட்சியில் நடிக்கும் முறையை ஷபீர் மற்றும் மிர்னா செய்யவில்லை. அவர்கள் எப்போது இந்த கதையைக் கேட்டார்களோ அதில் இருந்து கதாபாத்திரத்திற்காக தங்களை மனதளவில் தயார்ப்படுத்திக் கொண்டார்கள்.

படப்பிடிப்புத் தளத்தில் மிர்னா, தனியாக அமர்ந்து குழந்தையுடன் பேசிக்கொண்டு இருப்பார். ஷபீரும் தனது கதாபாத்திரத்தின் மனமாற்றத்திற்கு ஏற்றவாறு, யாருடனும் பேசாமல் அந்த உணர்வுடனேயே தனிமையில் இருப்பார். இவர்கள் கதாபாத்திரத்திற்காக தங்களை இப்படி மனதளவில் தயார்ப்படுத்திக் கொண்டு நடித்ததால், படத்தின் அனைத்து காட்சிகளும் மிக இயல்பாக வந்திருக்கிறது. ஷபீர் மற்றும் மிர்னாவின் நடிப்பை  ரசிகர்கள்  நிச்சயம் பாராட்டுவார்கள்.

மூணாறு அருகே உள்ள மரையூர் என்ற கிராமத்தில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். கதைக்கான லொக்கேஷனை சுமார் ஏழு மாதங்களாகத் தேடிய பிறகு தான் இந்த இடம் கிடைத்தது. லொக்கேஷன் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிப்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போல் மரையூர் கிராமம் இருந்தது. அங்கு எங்களுக்கு ஏற்ற வகையில்  நான்கு விதமான செட் அமைத்து அதில் தான் படப்பிடிப்பு நடத்தினோம்,”.

Read Previous

‘சுயம்பு’வுக்காக குதிரை யேற்றம் கற்கும் சம்யுக்தா

Read Next

மலையாள சினிமாவில் கால் பதிக்கும் அர்ஜூன் தாஸ்