கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விக்ரம், ரித்து வர்மா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’.
இந்த வாரம் நவம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ள இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘காக்க காக்க, வேட்டையாடு விளையாடு’ படங்களைப் போல இந்தப் படமும் ஒரு டிரென்ட் செட்டர் படமாக இருக்கும் என்று ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கௌதம் மேனன் சில பல சுவாரசியமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்தார்.
“படத்தில் கிரிக்கெட் பற்றிய விசயங்கள் எதுவும் இல்லை. ஒரு குழு பற்றிய படம், உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இந்த குழுவை ஒருங்கிணைக்கிறார். இதில் 11 பேர் இருப்பதால், ஒரு கிரிக்கெட் அணியோடு ஒப்பிட்டு டிரைலரில் அந்த வசனம் இடம் பெற்றது. படத்திலும் அந்த வசனங்கள் இடம் பெறும். ஆனல், கிரிக்கெட் பற்றி எதுவும் இல்லை.
இது தொடர்ச்சியான பாகங்களைக் கொண்ட படமாக இருக்கும். இது தான் அதன் தொடக்கம், இந்தப் படத்தின் முடிவில் ஒரு ட்விஸ்ட் இருக்கும். அதைத் தொடர்ந்து அடுத்த பாகம் வரும். அதில் வேறு ஒரு வில்லன் வருவார், வேறு ஒரு ஹீரோ கூட வருவார். சூர்யாவுக்காக நான் பண்ண கதைக்கும், இதற்கும் இருக்கும் வித்தியாசம் உண்டு. அதில் ஒரு உணர்வுபூர்வமான பிளாஷ்பேக் இருந்தது. இதில் அது இருக்காது, விக்ரம் சார் உள்ளே வந்ததால் அதை எடுத்துவிட்டேன்.
இந்தக் கதையை முதலில் சூர்யாவுடன் பண்ணுவதாக இருந்து கைவிடப்பட்டவுடன் ரஜினி சாரிடமும் கதையைச் சொன்னேன், அப்போதும் எமோஷனல் காட்சிகளை நீக்கிவிட்டுத்தான் சொன்னேன். ஒரு ஸ்டைலிஷான ஆக்ஷன் படமாக இருக்கும் சார், என்று தான் சொனேன். அவரும் கேட்விட்டு பிடித்திருப்பதாகச் சொன்னார். ஆனால், வேறு சில காரணங்களால் பண்ண முடியவில்லை. அதன் பிறகு தான் விக்ரம் உள்ளே வந்தார், அவரிடம் சொன்ன போதும் பிளாஷ்பேக் இல்லாமல் சொன்னேன், அவர் ஓகே என்று சொன்னார். ஆனால், அவர் கேட்ட ஒரே விசயம், உங்கள் படத்தில் வில்லன் கதாபாத்திரம் பலம் வாய்ந்ததாக இருக்குமே, இதிலும் அப்படித்தானா ? என்பது தான். அப்படி இருந்தால் தான் நீங்கள் பலமாக இருப்பீர்கள் என்று சொன்னவுடன் அவர் ஒகே சொல்லிவிட்டார்.

கதாபாத்திரத்தைக் கேட்ட பிறகு அதற்கு எந்த அளவுக்கு நடிக்க வேண்டுமோ அதை மட்டும் தான் விக்ரம் சார் செய்தார். கூடுதலாக இதை இப்படி வைக்கலாம், எனக்கு இது வேண்டும் என்று எதையுமே அவர் சொல்லவில்லை. அதனால், அவரிடமும் நான் எதையும் கேட்டு பெறவில்லை. நீங்கள் இந்த வேடம், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லியவுடன் அவர் அதற்கு ஏற்றவாறு நடிக்கத் தொடங்கி விட்டார். வில்லனாக நடித்த விநாயகனும் அப்படித்தான். எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவருடைய நடிப்பைப் பார்த்து விக்ரம் சார் பாராட்டினார்.
மும்பை தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஒரு குழு என்பது போல் தான் வைத்திருக்கிறேன். 15 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் சம்பவம் என்பதால் இவர்கள் யார் ? எப்படி உருவானார்கள் என்பதை சொல்லியிருக்கிறேன். அந்த குழுவை உருவாக்குபவர் அரசு பதவியில் இருப்பவர், ஆனால் அவர் எந்த பதவியில் இருப்பவர் என்பதை இப்போது சொல்ல முடியாது. அந்த கதாபாத்திரத்தில் பிரபல நடனக் கலைஞர் பத்மஸ்ரீ விருது வென்ற தனஞ்செயன் நடித்திருக்கிறார். முதலில் அமிதாப் பச்சனைத்தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க முயற்சித்தோம், ஆனால் வெளிநாட்டுப் பயணங்கள் இருப்பதால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அப்போது தான் தனஞ்செயன் சாரை பார்த்தேன், அவர் சரியாக இருப்பார் என்று தோன்றிது நடிக்க வைத்துவிட்டோம்.

’காக்க காக்க’ ஒரு போலீஸ் அதிகாரியின் கதை, அதற்கான வழியில் அதன் திரக்கதை இருக்கும், அவர் யார் என்பதையும் விளக்கியிருப்பேன். ஆனால், துருவ நட்சத்திரம் படத்தைப் பொறுத்தவரை ஒரு குழு உருவாக்கப்படுகிறது. விக்ரம் ஒரு பள்ளியில் வாத்தியாராக பணியாற்றுபவர். இது தான் அவருக்கான அடையாளம். ஆனால், அவருக்கு வேறு ஒரு உலகம் இருக்கிறது, அது யாருக்கும் தெரியாது என்பதால், அவருடைய கதாபாத்திரத்தை விளக்கக்கூடிய விசயங்களை இதில் செய்யவில்லை. ஒரு ஜானராக சொன்னால், இது ஒரு ஸ்பை த்ரில்லர் படம் என்று சொல்லலாம். ஆனால், ரொம்ப டெக்னிக்கலாக அதற்குள் நான் போகவில்லை. நாட்டுக்கு ஒரு பிரச்சனை வருகிறது அந்த பிரச்சனைக்காக அந்த குழு எப்படி பணியாற்றுகிறார்கள், அவர்களுக்கு ஒரு பிரச்சனை வருகிறது, அதை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள், என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன். இந்த குழுவினர் இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் பயணப்படுவார்கள். இந்தியாவுக்கு எதிரான பிரச்சனைகளை கையாள்வதற்காக உலக முழுவதும் பயணப்படும் ஒரு குழுவாக இருப்பார்கள்.
இஸ்தான்புல், சார்ஜா, துருக்கி, அமெரிக்கா, பல்கேரியா, ஜார்ஜியா, ருமேனியா, அபுதாபி போன்ற நாடுகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு ஜேம்ஸ்பான்ட் படத்தைப் பார்ப்பது போல இருக்கும். அடுத்தடுத்த பாகங்களையும் அப்படி எடுக்கத்தான் திட்டமிட்டுள்ளேன்.
இது அனைவருக்குமான படம் தான். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் தான் படம் இருக்கும். ஒரு ஸ்டைலிஷான ஆக்ஷன் கமர்ஷியல் படம் தான். ஆனால், அதை நான் ரியலாக கொடுத்திருக்கிறேன். பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை நம் ரசிகர்கள் ஏற்கனவே பார்த்துவிட்டார்கள். அதையே நான் திரும்ப செய்ய முயற்சிக்கவில்லை. அதே சமயம், படத்தில் உள்ள சண்டைக்காட்சிகள் ஸ்டைலிஷாகவும், ரியலாகவும் இருக்கும்.