‘மாற்றான்’ படத்தின் ரிசல்ட் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும், படம் வெளியான மறுநாளே ‘உலகமெங்கும் மாபெரும்’ வெற்றி என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பதுதான் நம் திரையுலகினரின் வழக்கம்.
அதற்கு மாற்றானும் விதி விலக்கல்ல. மாற்றான் திரைப்படத்தின் ‘வெற்றிக் கொண்டாட்டத்திற்கு (?) பத்திரிகையாளர்களை அழைத்திருந்தனர். ஆனால், அனைவரையும் கலந்து கொள்ள விடாமல் தடுத்து விட்டது சென்னையில் கொட்டித் தீர்த்த மழை. இன்னொரு காரணமும் உண்டு. சன் மியூசிக் தொலைக்காட்சியில் 7 மணி முதல் 9 மணி வரை சூர்யா பங்கு பெற்ற நேரடி ஒளிபரப்பு. எப்படியும் சூர்யா வர மாட்டார் என பத்திரிகையாளர்கள் முடிவு செய்ததும் ஒரு காரணம்.
அதையும் மீறி, மாற்றான் மீதிருந்த பாசத்தில் (?) சென்ற பத்திரிகையாளர்கள் மத்தியில் மாற்றான் உருவான விதத்தைப் பற்றிய விளக்கப்படத்துடன் உரையாற்றினார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.
சூர்யா தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்வது இவர்களுக்குத் தெரிந்தே நடந்த ஒன்றுதான். இருந்தும் அதே நேரத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தது ஏன் என்பதன் காரணம் தெரியவில்லை. சூர்யா வரமாட்டார் எனத் தெரிந்தே இதை ஏன் வைக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு.
எப்படியோ மாற்றான் வெளியீடு வரை ஒருவர் மாற்றி ஒருவர் புகழ்ந்து கொண்ட சூர்யா, இயக்குனர் கே.வி.ஆனந்த் இனி அப்படி செய்வார்களா என்பது சந்தேகம்தான்.