விஸ்வரூபம் – வாசகர் விமர்சனம்

மெரிக்காவில் படம் பார்த்த நமது வாசகர் எழுதி அனுப்பிய ‘விஸ்வரூபம் ’ விமர்சனம்…

உலக நாயகன் கமல்ஹாசன் கண்டிப்பாக தமிழ்சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஹாலிவுட் படத்திற்கு இணையான கதை, அதை திரைக்கதையமைத்து காட்சிகளாக்கி நம் கண்களை ஆச்சரியத்தில் விரிய வைத்திருக்கிறார்.

அறிவியலை மையமாக வைத்து காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் இயக்குனராக கமலின் திறமை மிகவும் பாராட்டுக்குரியது. எப்படித்தான் இவ்வளவு அருமையாக யோசிக்கிறாரோ தெரியவில்லை

விஸ்வநாத் என்கிற விஸ் (கமல்ஹாசன்)  ஒரு நடன இயக்குனர் .  அவரது மனைவி நிருபமா (பூஜா குமார்) ஒரு பி.எச்டி டாக்டரேட். பூஜாவிற்கு கணவர் கமலை பிடிக்கவில்லை. அதனால்  தனியார் துப்பறியும் நிபுணர் ஒருவரிடம் கமலைப் பற்றி துப்பறிந்து சொல்லச் சொல்கிறார்.  அந்த துப்பறியும் நிபுணர் கொலை செய்யப்பட அந்த பழி கமல் மீது விழுகிறது. ஆனால், அந்த கொலைக்கும் கமலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கமல் ஒரு ‘முஸ்லிம்’ என்பதும், அவர் எதற்காக நியூயார்க்கில் ‘இந்து’ வாக ஒரு நடனப் பள்ளி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.  கமல்  அப்படி இருக்க என்ன காரணம் என்பதை மீதி படம் விளக்குகிறது.

வன்முறை, தீவிரவாதம் இவற்றிற்கு எதிராகத்தான் இந்த படம் குரல் கொடுக்கிறது.

மனிதர்களைக் கொன்று குவிக்கும் காட்சிகளைப்  பார்ப்பதற்கு மட்டும் தைரியம் வேண்டும். தொடர்ச்சியாக காட்சிகளைக் கவனித்துக் கொண்டேயிருந்தால்தான் நமக்கும் புரியும். சில இடங்களில் கொஞ்சம் குழப்பம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

கமல்ஹாசன் நடிப்பைப் பற்றி புதிதாக என்ன  சொல்வது. எடுத்துக் கொண்டுள்ள கதாபாத்திரத்தில் அவரைப் போல் நடிக்க யார் இருக்கிறார்கள். அதிலும் அந்த முதல் நடனக் காட்சியும், அவருடைய நடனமும், நளினமும்…ஆஹா….போட வைக்கிறது. நடனக் கலைஞராகவும் சரி, போராளியாகவும் சரி, ராணுவ அதிகாரியாகவும் சரி அவருடைய நடிப்பும், பார்வையும், உடல் மொழியும் என பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.

கமல் படத்தில் மற்றவர்கள் நடிப்பைப் பற்றி சொல்வதற்கு இடமிருக்காது. ஆனால், இந்த படத்தில் படம் முழுவதும் வரும் பூஜா குமாரின் நடிப்பு பூரணமாக அமைந்திருக்கிறது.

மற்றொரு நாயகியா ஆன்ட்ரியா..அழகாக இருக்கிறார்..இவருடைய கதாபாத்திரத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாம்.

ராகுல் போஸ், ஜிதீப் அலாவத், இருவரின் வில்லத்தனமான நடிப்பும் அருமையாக உள்ளது.

சங்கர் எசன் லாயின் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பக்க பலம். ‘இவன் யார் என்று தெரிகிறதா….பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்.

அமெரிக்காவையும், ஆப்கன் காட்சிகளையும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் சனு வர்கீஸ்.

ஹாலிவுட் படங்களைப் போன்றே …அடுத்தும்..வரும் என இந்த ‘விஸ்வரூபத்தை’ முடித்த விதம் அருமை…

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இந்த விஸ்வரூபம் நிஜமாகவே ஒரு விஸ்வரூபம்தான்.

Read Previous

கலிஃபோர்னியாவில் கமல்ஹாசன்

Read Next

ரஜினிகாந்துக்கு அமெரிக்க அழைப்பு…