அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் ‘ஆதி பகவன்’ படம் விரைவில் வெளி வர இருக்கிறது.
இன்று இந்த படத்தின் மீதும் ஒரு புகார் அளிக்கப்பட்டது. சென்னை காவல் துறை ஆணையரிடம் ஆதி பகவன் படம் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இருக்கும் என சந்தேகிக்கிறோம் என உயர்நீதி மன்ற வக்கீல்கள் கிருஷ்ணமூர்த்தி, துரை செல்வன் ஆகியோர் மனு அளித்திருந்தனர்.
ஆதி பகவன் என்பது விநாயகரையும், சிவ பெருமானையும் குறிக்கும் என்பதால், படத்தில் நாயகன் ஜெயம் ரவி சைக்கோ கேரக்டரில் நடித்திருப்பதால், இந்து கடவுள்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். சென்சாருக்கு முன் எங்களுக்கும், அங்கீகாரம் பெற்ற இந்து அரசியல் கட்சிகள், இந்து அமைப்பினருக்கு படத்தைப் போட்டு காட்ட வேண்டும், ஆதி பகவன் தலைப்பையும் நீக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
இந்நிலையில் ஆதி பகவன் படத்தின் தயாரிப்பாளரான ஜெ. அன்பழகன்,“ ‘ஆதி பகவன்’ என்ற தலைப்பை திருக்குறளில் இடம் பெற்றுள்ள வார்த்தையாகத்தான் வைத்துள்ளோம். மக்களை மகிழ்விப்பதற்காகவே படம் எடுத்திருக்கிறோம், யாரையும் புண்படுத்த அல்ல. படத்தைப் பார்க்கும் போது, டைட்டிலுக்கான அர்த்தம் புரியும்’, என தெரிவித்துள்ளார்.