தயாரிப்பு – அக்ஷயா கிரியேஷன்ஸ் – ஏ.எம்.ஆர்.ரமேஷ், ஶ்ரீனிவாஸ், ஜெகதீஷ் கப்பண்ணா.
இயக்கம் – ஏ.எம்.ஆர். ரமேஷ்
இசை – சந்தீப் சவுதா
ஒளிப்பதிவு – விஜய் மில்டன்
படத்தொகுப்பு – ஆண்டனி
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்புராயன்
வசனம் – அஜயன் பாலா
மக்கள் தொடர்பு -மௌனம் ரவி
நடிப்பு – அர்ஜுன், கிஷோர், ‘ஆடுகளம்’ ஜெயபாலன், ரவி காலே, லட்சுமி ராய் மற்றும் பலர்.
வெளியான தேதி – 14 பிப்ரவரி, 2013
பல ஆண்டுகளாக தமிழ்நாடு, கர்நாடக காடுகளில் தனி மனிதனாக நின்று இரு மாநில அரசுகளுக்கும் சவால் விட்டுக் கொண்டிருந்த வீரப்பனைப் பற்றிய கதை. உண்மையான பெயர்களையே படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களாக வைத்து படத்தைக் கொடுத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படமாகக் கொடுத்திருக்கிறார்கள். காட்டில் யானை தந்தங்களையும், சந்தன மரங்களையும் கடத்தி, அதை எதிர்க்கும் வனத் துறையினர் மற்றும் காவல் துறையினரைக் கொல்லும் வீரப்பனை எப்படி அழிக்கிறார்கள் என்பதுதான் கதை.
தமிழக மக்கள் நாளிதழ்களில் படித்ததையும், தொலைக்காட்சிகளில் பார்த்ததையும் ஒரு கதைக் கோர்வையாக இந்த படத்தில் பார்க்கலாம். ஆனால், இப்படத்திலும் பல சந்தேகங்களுக்கு விடையில்லை. முக்கியமான பிரச்சனைகளை ஓரிரு காட்சிகளில் முடித்து விட்டார்கள். உதாரணத்திற்கு ஒன்று, நடிகர் ராஜ்குமார் கடத்தல் பிரச்சனை. உள்ளது உள்ளபடி சொல்ல என்ன தயக்கம் ?. ஒரு வேளை இங்கு ஏதாவது பிரச்சனை எழலாம் என்ற எண்ணத்தில் விட்டிருப்பார்கள் போலிருக்கிறது.
வீரப்பனாக கிஷோர். அந்த முரட்டு மீசை மட்டுமே வீரப்பன் என அடையாளப்படுத்துகிறது. துப்பாக்கியை தோள் மீது போட்டுக் கொண்டு நடப்பதும், சுடுவதுமாக நடித்திருக்கிறார். ஆனால், மிரள வைக்கும் ஒரு கம்பீரம் மிஸ்ஸிங். இவரது கண்களில் மிரட்டலும் தெரியவில்லை.
வீரப்பனை வீழ்த்தும் அதிரடிப்படை அதிகாரியாக அர்ஜுன். காட்டுப் பகுதியில் ஒரு பெரிய மாளிகையில் இருந்து கொண்டு வீரப்பனை வீழ்த்த திட்டம் தீட்டும் மாதிரியான காட்சிகளையே அதிகம் காட்டுகிறார்கள். இரண்டு மூன்று முறை காட்டில் விசாரணை செய்கிறார் அவ்வளவே.
அர்ஜுனுக்கு உதவி செய்யும் மற்றொரு அதிகாரியாக ரவி காலே. வீரப்பனுக்கு உதவி செய்து பின்னர் காட்டிக் கொடுக்கும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் ஜெயபாலன். லட்சுமிராய் டிவி நிருபராக ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். மற்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை.
பின்னணி இசையில் இன்னும் மிரட்டியிருக்கலாம். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாமே சராசரி ரகம்தான். காட்டுப் பின்னணி கதையில் மேக்கிங்கில் எவ்வளவோ அசத்தியிருக்கலாம்.
‘குப்பி’யை ரசிக்க வைத்த அளவிற்கு இந்த வன யுத்தத்தை ரசிக்க வைக்கவில்லை இயக்குனர் ரமேஷ்.
வன யுத்தம் – யுத்தம் எல்லாம் இல்லை, வெறும் துப்பாக்கிச் சண்டை.
